ஆன்மிக தகவல் – ஆடி அம்மனின் ஆனந்த தரிசனம்

4.9/5 - (61 votes)

ஆடி மாதம் அம்மன் கோவில் தரிசனம் சிலவற்றை இங்கு காண்போம் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் வரலாறு,சமயபுரம் – மாரியம்மன், வீரபாண்டி-கௌமாரி, தஞ்சாவூர்-வடபத்ரகாளி,நத்தம்-மாரியம்மன்,இருக்கன்குடி – மாரியம்மன்,மேல்மலையனூர்–அங்காளபரமேஸ்வரி,கோவை–சௌடாம்பிகை,புட்லூர் – பிள்ளைத்தாய்ச்சி அம்மன்,சிதம்பரம்- தில்லை காளி,மயிலாப்பூர் – முண்டகக் கண்ணி,மங்கலம்பேட்டை – மங்களநாயகி,சிறுவாச்சூர் – மதுரகாளியம்மன்,அறச்சலூர் – அறச்சாலை அம்மன்,திருவக்கரை – வக்ரகாளி,திருவேற்காடு – கருமாரியம்மன்

சமயபுரம் – மாரியம்மன்

வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள். உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டில் எங்கள் படை போரிட்டு வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று வேண்டிக் கொண்டார். மாரியின் அருளால் போரில் வென்றான். அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தான். பரிவார தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியும் பிரதிஷ்டை செய்தனர். தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோயிலில் எப்போதும் கூட்டம்தான்.

மாவிளக்கு போடுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு என்று எல்லாவிதமான பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள். சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. உதடு பிரித்தும் பேசும் தெய்வத்தாய். கோடிக்கணக்கான குடும்பங்களின் குல தேவதை. சமயபுரத்தாளே…. என்று திக்கு நோக்கி கைகூப்பினாலேயே ஆசி தரும் ஆதிசக்தி. திருச்சி மாநகரத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

வீரபாண்டி – கௌமாரி

தேனி மாவட்டம் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டியில் வீற்றிருக்கிறாள், கௌமாரியம்மன். இந்த மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு இரு கண்களும் பாதிப்பட்டன. அரசன் பார்வை பெறவேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தான். ஈசனும், ‘‘புள்ளைநல்லூரியில் கண்ணுடைய தேவி தவமிருக்கிறாள்.

அவளுக்காக கோயில் எழுப்பு’’ என்று அருளாணையிட்டார். மன்னனும் அதை ஏற்று கோயில் கட்டினான். கண் பார்வை பெற்றான். வீரபாண்டி மாரி என்று அம்மனும் வழிபடப்பட்டு வருகிறாள். இன்றும் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தை நோக்கி வந்து நலம் பெறுகிறார்கள். தேனி – கம்பம் வழியில் தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் – வடபத்ரகாளி

தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன் நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள்.

அதனாலேயே நிசும்பசூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் இந்த காளியை வணங்கிச் சென்றனர். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல மண்ணை மிதித்தாலே போதும். தெளிவு பெறுவது நிச்சயம்.

நத்தம் – மாரியம்மன்

மதுரை சிற்றரசர்களில் ஒருவரான சொக்கலிங்க நாயக்கரின் அரசபீடத்தை அலங்கரித்த தெய்வமே நத்தம் மாரியம்மன் ஆகும். அரண்மனைக்கு பால் அளக்கும் ஒருவன் பக்கத்து சிற்றூரிலிருந்து குடத்தில் பால் கொணர்வான். பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்க பால் குடம் தானாக காலியாகி கிடந்தது. அரசனுக்கு இந்த விஷயம் சென்றது.

சோதித்துப் பார்க்கும்போதும் அப்படியே நடந்தது. மன்னன் அந்த இடத்தை தோண்டச் சொன்னார். ரத்தம் பீறிட்டது. அம்மனின் சிலை தெரிந்தது. அங்கேயே அரசன் அம்மனுக்கு கோயிலைக் கட்டினான். இத்தலம் திண்டுக்கல்லுக்கு அருகேயே உள்ளது. நோய் தீர்க்கும் தேவியாக நத்தம் அம்மன் விளங்குகிறாள்.

இருக்கன்குடி – மாரியம்மன்

சதுரகிரியில் வாழ்ந்த சிவயோகி ஞானசித்தர் என்பவர் பராசக்தியை நோக்கி தவமிருந்தார். தான் யோக நிஷ்டையாகும் இடத்தில் மாரியம்மனாக அருள்பாலிக்க வேண்டுமென வரம் கோரினார். அன்னையும் அவ்வாறே அருளினாள். வெள்ளப் பெருக்கால் அழிந்து விட்ட கிராமத்திலுள்ள மாரியம்மன் சிலையொன்று சித்தர் ஐக்கியமான பூமிக்குள் வந்து புதைந்தது. பூசாரிப்பெண் ஒருத்தி சாணக்கூடையை வைத்து எடுக்க முயன்றபோது தூக்க முடியவில்லை.

அப்போது அங்கு பூசாரிப் பெண்ணுக்கு அருள்வந்து தான் மாரியம்மனாக இங்கிருப்பதாக வாக்களித்தாள். பக்தர்கள் இன்றுவரை அவளின் அருட்சாரலில் சுகமாக வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சில ஆயிரம் குடும்பங்களுக்கு இவள்தான் குலதேவதை. இடுக்கண் என்று வந்தோரை காப்பாற்றும் இருக்கன்குடி நாயகி இவள்.

மேல்மலையனூர் – அங்காளபரமேஸ்வரி

பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக ஈசன் பிரம்மனின் ஐந்தாவது தலையை பிய்த்துப் போட்டார். பிரம்மனின் தலையை கொய்த பாவமும், சரஸ்வதியின் சாபமும் ஈசனைத் துரத்தின. திருவோடு ஏந்தி பசியோடு ஈசன் அலைந்தார். இத்தலத்தில்தான் புற்றுருவாக பார்வதி எழுந்தருளி பிரம்ம கபாலத்தை ஈசனிடமிருந்து பறித்து சாப நிவர்த்தி பெற்றுத் தந்தாள்.

எளிமையான மக்களிடையே அவர்களுக்குள் ஒருத்தியாக அங்காளம்மன் புற்றுக்கு பின்னால் எழுந்தருளியிருக்கிறாள். பிரதி அமாவாசையன்று பல லட்சம் பக்தர்கள் இங்கு கூடுவார்கள். திண்டிவனம் – செஞ்சி சாலையின் நடுவே பிரியும் சாலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சகல தோஷங்களையும் சிதறடிக்கும் சீரியவள் இவள்.

கோவை – சௌடாம்பிகை

ஈசனின் ஆணைப்படி தேவலன் எனும் முனிவர் திருமாலை நோக்கி தவமிருந்தார். அசுரர்கள் அவரை தொந்தரவு செய்த வண்ணம் இருந்தனர். அவர்களின் தொல்லையை திருமாலின் சக்ராயுதம் தடுத்தது. அதையும் தாண்டி ஒரு அம்பு தேவலனை துளைத்தது. அப்போதுதான் அம்பாள் சௌடாம்பிகை எனும் திருநாமத்தோடு எழுந்தருளி காத்தாள்.

இக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் சந்நதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன. மனதின் வேதனை போக்குவதில் இவள் மகாதேவி. ஆடி வெள்ளியின் ஒவ்வொரு வாரத்திற்கும் ஓவ்வொரு அலங்காரம் என அழகாக ஜொலிக்கிறாள். இக்கோயிலிலுள்ள அஷ்ட லட்சுமி சந்நதியை நிச்சயம் தரிசிக்க வேண்டும். கோவை நகரின் மையத்தில் ராஜவீதியில் கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.

புட்லூர் – பிள்ளைத்தாய்ச்சி அம்மன்

பார்க்கும்போதே உடலும், உள்ளமும் சிலிர்க்கும். கர்ப்பிணிப் பெண் வடிவில் உலகையே சுமந்து கருணையோடு கால்நீட்டி காட்சி தரும் பிள்ளைத் தாய்ச்சி அம்மனை வேறெந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கருவைச் சுமக்கும் பெண்ணின் தாய்மையை, இங்கு உலகைச் சுமந்து வெளிப்படுத்துகிறாள். குழந்தைவரம் வேண்டி தொட்டில் கட்டுவோர்கள் விரைவில் மழலையோடு கண்கலங்க நிற்கிறார்கள். சென்னை, ஆவடி – திருவள்ளூர் வழியில் காக்களூர் நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது ராமாபுரம் என்ற புட்லூர். அம்மையை தரிசியுங்கள். ஆனந்தம் பெற்றிடுங்கள்.

சிதம்பரம் – தில்லை காளி

சிதம்பரத்தில் ஈசனோடு போட்டியிட்டு நடனம்புரிந்து தோற்றவள் தில்லையின் எல்லையில் கருணையோடு வீற்றிருக்கிறாள். அலகிலா விளையாட்டுடையவனின் பெருமையை உணர்ந்து தானும் அந்த ஆதிசக்தியில் பாதி என்பதை உணர்ந்து, நான்கு முகமான பிரம்ம சாமுண்டியாக கருவறையிலும், உக்கிரகமான காளியாக வெளியே தனி சந்நதியிலும் அமர்ந்திருக்கிறாள்.

உக்கிரம் குறையக் கூடாது என்பதற்காகவே அபிஷேகம் எதுவும் இவளுக்கு செய்யப்படுவதில்லை. தீவினைகளோ, தீயசக்திகளின் பாதிப்புகள் இருந்தால் தில்லை காளியின் தரிசனத்தில் தகர்ந்து போகும். இந்த ஆலயம் சிதம்பரத்திலேயே உள்ளது.

மயிலாப்பூர் – முண்டகக் கண்ணி

மயிலையின் பேசும் தெய்வம். எப்போது வந்தமர்ந்தாள் என்று தெரியவில்லை. ஆனால், எப்போதுமே பக்தர்களை காக்க இங்குதான் நான் இருக்கப்போகிறேன் என்பதுபோல வீற்றிருக்கிறாள். மூலவருக்கான கருவறை விமானம் இல்லை. கட்ட அவள் உத்தரவு தரவில்லை என்கிறார்கள். அதனாலேயே கீற்றுக் கொட்டைக்குள் கருணை மணம் கமழ வாசம் செய்கிறாள்.

முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். தாமரை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். ஞான சூரியனை கண்ட தாமரை மலர்வதுபோல உங்களுக்குள்ளிருக்கும் ஞான தாமரையை இவள் மலர வைப்பாள். உயிரை காப்பாற்றுதலும், உயர்ந்த பதவியில் அமர்த்துதலையும் இவள் இங்கு எளிதாகச் செய்கிறாள். மயிலாப்பூர் நகரத்தின் மையத்திலேயே இவள் கோயில் கொண்டிருக்கிறாள்.

மங்கலம்பேட்டை – மங்களநாயகி

செவ்வகக் கல் மூர்த்தத்தில் சற்று உக்கிரமாக அருளும் வனதுர்க்கை இவள். கண்ணகிக்கு கோயில் கட்ட சேரன் செங்கூட்டுவன் இமயமலையிலிருந்து இரு கற்களைக் கொண்டு வந்தபோது தனக்கு மிகப் பெரிய உதவிகளை செய்த பரூர் பாளையத்தை சேர்ந்த குறுநில மன்னனுக்கு தான் கொண்டு வந்து இரு புனிதக் கற்களில் ஒன்றை அவனுக்கு ஈந்தான்.

அதில் ஒன்றில்தான் பரூர் மன்னன் உக்கிர நாயகியான இந்த மங்கலநாயகியை எழுந்தருளச் செய்தான். கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சிறுவாச்சூர் – மதுரகாளியம்மன்

காளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். செல்லியம்மனோ நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப்படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு தாயே என்றாள். கண்ணகி கண்கள் மூடி காளியை வணங்கினாள். அரக்கன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள். வந்த அரக்கனும் அகம்பாவத்துடன் பேச அங்கேயே அவனை காளிவதம் செய்தாள்.

செல்லியம்மன் மலைமீது குடிகொள்ள மதுரகாளியம்மன் என்று திருப்பெயரோடு காளி கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து விளக்கேற்றுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன் மனைவி பிரச்னை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது. திருச்சி – பெரம்பலூர் நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

அறச்சலூர் – அறச்சாலை அம்மன்

அறம் வளர்த்த ஊர் என்பதால் அறச்சலூர் அம்மன் என்று பெயர் வந்தது. கம்பீரமான குதிரைகளுக்கு மத்தியில் எண்கரங்களோடு சூரனை வதம் செய்த கையோடு வீற்றிருக்கிறாள். ஜாதகப் பொருத்தமே இல்லை என்றாலும் கூட இந்த அம்மனின் உத்தரவு இருந்தால் போதும் என்கிறார்கள். பூ போட்டு வாக்கு கேட்கிறார்கள். வெள்ளை நிறப் பூக்கள் மூன்றும், சிவப்பு நிறப் பூக்கள் மூன்றும் பயன்படுத்துவர்.

சிவப்பு பூ வந்தால் சுப விசேஷங்கள் நிறைவேறும் என்றும், வெள்ளை நிறப் பூக்கள் வந்தால் வீடு மனை நிலம் வாங்கலாம் என்பதாக அம்மன் உத்தரவிடுகிறாள். மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மாங்கல்யத்தை வைத்து வழிபட்டு அம்மனுக்கே அதை காணிக்கையாகத் தருகிறாள். ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 24வது கிலோமீட்டரில் இக்கோயில் உள்ளது.

திருவக்கரை – வக்ரகாளி

ஆதித்ய சோழரும், பராந்தகரும், கண்டராதித்தரும், செம்பியன் மாதேவியாரும் பார்த்துப் பார்த்து சமைத்த கோயில் இது. சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவே வக்ரகாளி அதிஉக்கிரமாக தனிச்சந்நதியில் வீற்றிருக்கிறாள். வக்ராசுரன் என்பவன் ஈசனை நோக்கித் தவம் புரிந்தான். ஈசனின் தரிசனமும் வரங்களும் பெற்றான். தேவலோகத்தை புரட்டிப் போட்டான். கேட்பாரே இல்லாமல் திரிந்தவனை காளி எதிர்கொண்டாள்.

வக்ராசுரனையும், அவள் தங்கையான துன்முகியையும் விஷ்ணுவும் காளியும் முறையே வதம் செய்தனர். வதம் செய்த உக்கிரத்தோடேயே இத்தலத்தில் அமர்ந்தாள். இன்றும் அந்த திருவெம்மை அங்கு பரவியிருப்பதை தரிசிப்போர் நிச்சயம் உணர்வர். ஜாதக ரீதியாகவும், தீயசக்திகளால் பாதிக்கப்பட்டு மனநிலை சரியில்லாதவர்கள் இச்சந்நதி நெருங்கும்போது தெளிவடைவர் என்பது உறுதி. திண்டிவனம் – விழுப்புரம் பாதையில் மயிலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருவேற்காடு – கருமாரியம்மன்

வெள்வேல மரங்கள் அதிகமாக இருந்ததால் வேற்காடு என்றானது. வேதங்களையே மரங்களாக்கி அதனடியில் லிங்க மூர்த்தத்தில் ஈசன் வெளிப்பட்டார். லிங்கத்தோடு அன்னையும் உதயமானாள். கொடிய அசுரனை அழிக்க முருகனுக்கு கருமாரி அன்னை தம் திருக்கரத்தால் வேல் அளித்தாள். அதனாலேயே வேற்கன்னி ஆனாள். வேலன் வேலால் கீறி தீர்த்தம் உண்டாக்கினான்.

அதுவே வேலாயுத தீர்த்தமாயிற்று. அந்த பராசக்தியே இங்கு மாரியம்மனாக அமர்ந்து எல்லோரையும் காக்கிறாள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே இந்த கருமாரி. வேண்டுதல் இல்லாமலேயே வேண்டியதை தருவதில் பெற்றவளுக்கும் நிகரற்று விளங்கும் தாய் இவள். இத்தலம் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகே உள்ளது.

You may also like...