ஆன்மிக தகவல் – ஆரோக்கியம் அருளும் தீர்த்தமலை:
ஆரோக்கியம்_அருளும்_தீர்த்தமலை
எத்தனை சுகபோகங்கள் ஒரு மனிதருக்கு இருந்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்வே நரகமாகிவிடும் அத்தகைய ஆரோக்கியத்தை அருளும் அற்புதத் தலம் தீர்த்த மலை.
தீர்த்தமலை என்பது தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது.
மேற்கே வாயு, வருண தீர்த்தம், கிழக்கில் இந்திர தீர்த்தம், வடக்கே அனும தீர்த்தம், தெற்கே எம தீர்த்தம், மலையின் உச்சியில் வசிஷ்ட தீர்த்தம் எனத் தீர்த்தங்களால் சூழப்பட்ட மலையாக “தீர்த்தமலை” விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள் மூலிகை காற்றை சுவாசிப்பதால் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் பெறுகின்றனர். இத் தலம் அரிமலை, தவசிகிரி என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. எந்நேரமும் தீர்த்தம் கொட்டிக் கொண்டே இருப்பதால் “தீர்த்தம் கொட்டுகிற மலை” என்று அழைக்கப்பட்டு, பின்னர் தீர்த்தமலை ஆனது.
ஈஸ்வரரின் அகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால் #அகஸ்தீசர் என்று பெயர் பெற்ற தலைமை சித்தரும், சிறந்த மருத்துவரும், தமிழுக்கு முதலில் இலக்கணம் வகுத்தவருமான அகத்தியருக்கு ஒருமுறை தீராத வயிற்று வலி ஏற்பட்டு, இத் தலத்திற்கு வந்து சிவனாரை வழிபட்டாராம். எனவே அகத்தியரின் வயிற்று நோயைப் போக்கிய தலம் என்ற பெருமை இந்த தீர்த்த மலைக்கு உண்டு.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இத் தலத்தில் அகத்தியர் உட்பட்ட பல முனிவர்கள் மற்றும் தேவர்கள் தவம் செய்துள்ளனர். இராமாயண காலத்துடன் தொடர்புடைய இடம் தீர்த்தமலை. பிரம்மாவின் பேரனான புலஸ்திய மகரிஷியின் மகனான விஸ்ரவஸ் முனிவருக்கும், ,அரக்கர் குலப் பெண்ணான கைகசிக்கும் பிறந்த அந்தணனான இராவணனைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோஷம் இராமபிரானுக்கு பிடித்தது. எனவே அவர் சிவபெருமானை வழிபட்டு இராமேஸ்வரம் கடற்கரையில் சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றாராம். ஆனால் அதிலும் அவரது தோஷம் முழுமையாக விலகவில்லையாம். எனவே #ஸ்ரீராமபிரான் இந்த தலத்திக்கு வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின்னரே அவரது பிரம்மஹத்தி தோஷம் பூரணமாக விலகியதாம்.
இராமேஸ்வரத்தில் சிவனாரை வழிபட்டு அயோத்திக்குத் திரும்பும் வழியில் ஸ்ரீராமர், சீதை, இலட்சுமணர், அனுமன் ஆகியோர் அயோத்தி திரும்பும் வழியில் தற்பொழுது அரூர் என்றும் முற்காலத்தில், "அரிக்காடு" என்றும் விளங்கிய இடத்தில் "வருணீஸ்வரர் கோயில்" அருகே வந்ததும், அவர்கள் பயணம் செய்த ரதம் நின்று விட்டதாம்.
அனைவரும் ரதம் நின்றதன் காரணம் தெரியாமல் திகைத்தனர். அப்பொழுது தீர்த்தமலையில் தவமிருந்த அகத்தியர் காட்டில் இராமபிரான் வரும் விஷயத்தை அறிந்து அங்கே வந்தார் . அகத்தியரை வணங்கி தங்களது பயணம் தடைப்பட்டதன் காரணத்தை இராமபிரான் கேட்கத் தீர்த்தமலையின் சிறப்புகளைகீ கூறி அங்கே அழைத்து சென்றார் அகத்தியர்.
இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தும் உங்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் முழுமையாக விலகவில்லை. எனவே தான் இரதம் நின்றுவிட்டது! தீர்த்தங்களில் உயர்வான காசி தீர்த்தத்தைக் கொண்டு தீர்த்தமலையிலுள்ள இறைவனுக்கு ஒரு மண்டலம் உச்சிகால பூஜை செய்தால், உங்கள் தோஷம் முழுமையாக விலகிவிடும்! என்று ஆலோசனை கூறினார் அகத்திய_மாமுனிவர்.
உடனே இராமருக்கு உதவும் பொருட்டு நான் காசிக்கு சென்று தினமும் பூஜை தீர்த்தம் கொடு வருகிறேன் என்று புறப்பட்டார்! வாயுபுத்திரர் அனுமன். தீர்த்தமலையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த இராமபிரான் தினமும் அனுமன் கொண்டுவந்த காசி தீர்தத்தால் சிவபூஜை செய்து வந்தார். மண்டல பூஜை முடியும் நாளில் காசியின் மிகவும் தூய்மையான இடத்தில் தீர்த்தம் எடுக்க நினைத்தார் ஆஞ்சநேயர்.
ஆனால் அங்கே சப்தகன்னியர் நீராடிக் கொண்டிருந்தனர். எனவே சற்று நேரம் காத்திருந்து, அவர்கள் நீராடி சென்றதும் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் அனுமன். ஆனால் அதற்குள் உச்சிகால பூஜைக்கு நேரம் வந்துவிடவே, பூஜைக்கு தீர்த்தம் இல்லாமல் இராமபிரான் சிரமப்பட்டார். எனவே அங்கிருந்த சிவபெருமானை நினைக்க, மறுகணமே அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அம்பை செலுத்துமாறு அசரீரி வாக்காக கூறினார் சிவபெருமான்.
அப்படியே இராமர் தனது பாணத்தை அந்த மலையில் செலுத்த, அங்கே ஒரு தீர்த்தம் உருவானது. காசி தீர்த்ததிற்கு இணையான அந்தத் தீர்த்தமே
இராமர்_தீர்த்தம் . அதைத்தொடர்ந்து கௌரி தீர்த்தம், குமார தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்தம் ஆகியன தோன்றின.
உடனே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த புண்ணிய தீர்த்தங்களில் சிவபூஜை செய்தார் இராமபிரான். மண்டல பூஜையின் இறுதி நாளில் தான் கொண்டுவரும் தீர்த்தத்திற்கு காத்திராமல் சிவபூஜையை இராமர் முடித்து விட்டதால், கோபம் கொண்டு தன் கையிலிருந்த தீர்த்தத்தை மலையிலிருந்து வீசி எறிந்தார் ஆஞ்சநேயர். அது கீழே விழுந்த இடத்தில் ஒரு தீர்த்தம் உருவானது. அதுவே அனுமன்_தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
தீர்த்தமலையில் தோன்றிய புண்ணியத் தீர்த்தங்களால் தீர்த்தகிரீஸ்வரரை வழிபட்டதால் தான் இராமரின் பிரம்மஹத்தி தோஷம் முழுமையாக விலகியது! என்று தெரிவிக்கிறது தீர்த்தமலை தலபுராணம். இம்மலையில் படிகளின் வழியே ஏறிச் செல்லும்போது பல இடங்களில் சிறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வணங்குகின்றனர்! மக்கள். இவ்வாறு வேண்டிக் கொண்டால் சொந்த வீடு கட்டுதலில் இருக்கும் தடைகள் நீங்கும்! என்பது மக்களின் நம்பிக்கை.
மூலவர் தீர்த்தகிரீஸ்வரர் மிகுந்தச் சக்தி உடையவர். குழந்தைப்பேறு கிட்ட, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, நோய் நொடிகள் தீர, கடன் தொல்லை தீர பக்தர்கள் பலரும் இவரை வழிபட்டுச் செல்கின்றனர். இந்த இறைவனை வழிபாடு செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்! என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்கு வந்து மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சிவபெருமானுக்குத் தேன், நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு, பழவகைகள் போன்றவற்றால் அபிஷேகம் செய்து அம்பாளுக்கு புடவை சார்த்தி தங்களது வேண்டுதலைப் பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
வெளிப் பிரகாரத்தில் *அகத்தியர் தீர்த்தம், *அக்கினி தீர்த்தம், *இராமர் தீர்த்தம், *குமார தீர்த்தம், *கௌரி தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் அமைந்துள்ளன.மேலும் தீர்த்த மலையை சுற்றியுள்ள இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடி, தீர்த்தகிரீஸ்வரரை வழிபட்டால் இருபத்தோரு தலைமுறைக்கு பாபங்கள் நம்மை அண்டாது.
இந்தப் புண்ணிய தீர்த்தங்களை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம் .
- இராமர்தீர்த்தம் இதில் நீராடி வழிபட்டால் தரித்திரங்கள் விலகும், இலட்சுமி கடாட்சம் கிடைக்கும், செய்வினைகள் கோளாறுகள்,தோல் வியாதி நீங்கும்.
- குமாரதீர்த்தம் பார்வை குறைபாடு நீங்கும், ஞாபகசக்தி பெருகும்.
- கௌரிதீர்த்தம் பேச்சு குறைபாடு சரியாகும், குழந்தை பாக்கியம் கிட்டும், நாகதோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்.
- அக்னிதீர்த்தம் ஆஸ்துமா, சளி தொந்தரவு, உடல்வலி நீங்கும்.
- அகத்தியர்_தீர்த்தம் _ வயிற்றுவலி, வயிற்றுப்புண், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு நீங்கும். பிற தீர்த்தங்களின் அமைவிடங்கள்_
வசிஷ்டதீர்த்தம் மலைக் கோயிலில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காட்டுப்பாதையில் பாறைகளிலிருந்து ஓரிரு நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் கொட்டுகிறது.
- எமதீர்த்தம் தீர்த்தமலையில் பின்புறம் வேப்பம்பட்டி என்ற ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- இந்திர_தீர்த்தம் _தீர்த்தமலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மொண்டுக்குழி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது ஆதி தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் இங்கே உள்ளது.
- அனுமன்தீர்த்தம் அனுமன் வீசிய காசி தீர்த்தச் செம்பு விழுந்த இடம் தீர்த்தமலை இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தீர்த்தத்தில் நீராடிவிட்டு தீர்த்தமலையில் நீராடினால் அனைத்து பேறுகளும் கிடைக்கும். வாயுதீர்த்தம், வருணதீர்த்தம்
இவை இரண்டும் அரூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக உள்ளது.
விநாயகர், முருகன், அகத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, அகத்தியர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை, கோதண்டராமர், சீதை, இராமலிங்கம் , அரிகரபுத்திரன், சூரியன், சந்திரன், நவகிரகங்களை இங்கே தரிசிக்கலாம். இங்கே தலவிருட்சமாகப் பவளமல்லி மரம் உள்ளது.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கௌரி தீர்த்தத்தில் நீராடி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டுகிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் மங்கல பொருட்களை முடிந்த மஞ்சள் கயிறை பவளமல்லி மரத்தில் கட்டி மூன்று முடிச்சு போடுகிறார்கள். இப்படி செய்வதால் எப்படிப்பட்ட குறைகளும் நீங்கித் திருமண பாக்கியம் விரைவில் கிட்டுமாம்.
இங்குள்ள அம்மன் வடிவாம்பிகை மங்கள காரியங்களை விரைவில் நிறைவேற்றி வைக்கிறாள். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி நாட்களை இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தீர்த்தமலையில் மலைக்கோயில் பிரதானமாக விளங்கினாலும், விழா எடுக்கும் பொருட்டு மலையடிவாரத்தில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய திருக்கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கோயிலும் யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சோழர்களும், சாளுக்கியர்களும், நாயக்கர் காலங்களிலும் இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டிருப்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. அடிவாரக் கோயிலிலும் இறைவன் தீர்த்தகிரீஸ்வரர், இறைவி வடிவாம்பிகை என்ற திருநாமங்களில் அருள்கின்றனர்.
தீர்த்தகிரீஸ்வரரும், கிராம தெய்வமான சென்னம்மாளும் இப்பகுதியில் பலருக்கு குலதெய்வமாக விளங்குகின்றனர். ஆடிப்பெருக்கு விழா இங்கு மிகவும் விசேஷமானது. இம்மலையில் அக்காலத்தில் வசித்த சித்தர்கள், முனிவர்கள் அருவமாகவும் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்களின் வடிவிலும் தீர்த்தகிரீஸ்வரர் இன்றும் வழிபடுவதாக மக்கள் நம்புகின்றனர்.
மலைச்சாரலில் வளரும் அபூர்வ மூலிகைகள் இங்குள்ள தீர்த்தங்களில் கலந்திருப்பதால், இதில் நீராடும் பக்தர்களின் உடற்பிணியும், உள்ளப்பிணியும் நீங்குகிறது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தமலை உள்ளது. அடிவாரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மலை கோயில் அமைந்துள்ளது.