ஆன்மிக தகவல் – இந்து சமய அறநிலையத்துறையின் ஆன்மீக சுற்றுலா

5/5 - (51 votes)

ஆடி வெள்ளி, இந்து சமய அறநிலையத்துறையின் ஆன்மீக சுற்றுலா.. அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

சென்னை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுப்பர்கள். அப்படி ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்காக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஒரு அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஆன்மீக சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவானது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மீக பயணிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்யும் வகையில் இந்த ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தனி நபருக்கு மட்டுமல்ல குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள பல கோயில்களை சுற்றி பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும் பொருந்தும். இதன் முதற்கட்டமாக சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் திருக்கோயில்களுக்கான ஆன்மிகச் சுற்றுலாவை கடந்த 18ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர்பாபு தொடங்கி வைத்தார். ஆடி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மதுரையில் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா கிளம்பினர். மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோயில், அருள்மிகு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோயில், அருள்மிகு மடப்புரம் காளியம்மன் திருக்கோயில்,அருள்மிகு தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அருள்மிகு ராக்காயி அம்மன் கோயில், அழகர்கோயில் அனைத்து கோயில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை. கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து பக்தர்களை வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அனைத்து கோவில்களிலும் அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஒரு நாள் ஆடி அம்மன் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்கள் www.ttdconline.com என்ற இணையத்தின் மூலமாகவும், மற்றும் ஓட்டல் தமிழ்நாடு அழகர்கோவில் ரோடு. மதுரை-2-வில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஓட்டல் தமிழ்நாடு அழகர்கோவில் ரோடு. மதுரை 6380699288. – 9176995841, என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட சுற்றுலா அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...