ஆன்மிக தகவல் – கால பைரவர் தரிசனம்

Rate this post

கால பைரவர் தரிசனம் !!

கால பைரவரை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார்.

சிவபெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ஒன்று பைரவ அவதாரம்.

பைரவர் தோன்றிய வரலாறு : அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும் படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள் மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களின் கருணையால் அந்தகாசுரன் அழிந்தான். இதுவே பைரவர் அவதரித்த நோக்கம்.

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.

சக்தி புராணத்தில் கால பைரவர் : புராண காலத்தில் ஈசனின் மனைவியான தாட்சாயிணி தேவியை அவளின் தந்தை தட்சன் அவமானப் படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த சிவ பெருமான். தாட்சாயிணியின் உடலை கையில் ஏந்திய வாறு கோபமாக திரிந்த போது, அந்த சிவ பெருமானை அமைதிப்படுத்த திருமால் தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை பல துண்டுகளாக அறுத்து இந்த பாரத தேசமெங்கும் தேவியின் அந்த உடல் துண்டுகளை விழச் செய்தார். அந்த இடங்கள் இப்போது சக்தி பீட கோவில்களாக உள்ளன.

இப்போது அம்மனின் சக்தி பீடங்களாக இருக்கும் அந்த புண்ணிய தளங்களை, சிவ பெருமானே பைரவர் வடிவம் தரித்து காவல் புரிவதாக கருதப்படுகிறது. இந்த பைரவர் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் ஆவார். நவகிரகங்களின் பிராணனாக பைரவர் இருப்பதால், நவ கிரகங்களில் எந்த ஒரு கிரக பெயர்ச்சிகளால் தீய பலன்கள் வந்தாலும்… பைரவரை வழிபடலாம். நிச்சயம் நற்பலன் கிடைக்கப்பெறும். மேலும், கால பைரவரை பக்தியுடன் வழிபடுவதால் வழக்குகள் கூட சாதகம் ஆகும். முக்கியமாக செய்வினை கோளாறுகள் அகலும். எதிரிகள் பணிவார்கள். மற்றபடி, பைரவர்களில் கால பைரவர் மிகவும் விசேஷித்தவர்…

காசியில் கால பைரவர்:

கால பைரவரை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

இவர் ஒரு சில சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். இவர் சனி பகவானின் குரு ஆவார். அந்த வகையில் இவரை சனிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் தீரும். அதிலும், கால பைரவர், காலத்தை கட்டுப்படுத்தும் பைரவர் ஆவார்.

கால பைரவ வழிபாடு : தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது… அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த சமயத்தில், கால பைரவரின் மந்திரத்தை ஜபித்தால் என்பது நன்மை செய்யும்.

கால பைரவர் மந்திரம்:

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

“ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையுடன், 27 முறை கூறி வழிபட வேண்டும். மாலை வேளையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட தீவினைகள் நீங்கும். குறிப்பாக மரணத்தை குறித்த பயங்கள் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.

You may also like...