ஆன்மிக தகவல் – சுபகாரியங்களில் அட்சதை போடுவது ஏன்?
திருமணத்தில் அட்சதை அரிசியில் போடுவது ஏன்? அதன் மகிமை என்ன?
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போது தூவி வாழ்த்துவதில் மலர்களைவிட மேலானது அட்சதை. அட்சதை இல்லாதபோதே மலர்களும், புனித தீர்த்தமும் பயன்படுத்தப்படுகிறது. வடமொழியில் “க்ஷதம்” என்றால் இடிப்பது என்று பொருள்.
“அக்ஷதம்” என்றால் இடிக்கப்படாதது அல்லது குத்தப்படாதது என்று பொருள்.
அரிசியோடு தூய மஞ்சள் கலந்து, அதனோடு பசு நெய் சேர்த்து உருவாக்கப்படுவதே அட்சதை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இது தேவதைகளின் அம்சம் கொண்டது. இது பெரியோர்களின் ஆசிகளையும் கொண்டு சேர்க்கும் பொருளாக உள்ளது.
நிலத்தின் அடியில் விளையும் மஞ்சள், நிலத்தின் மேலே தோன்றும் நெல்லுடன் இணைவதும், அதோடு குற்றமே இல்லாத நெய்யோடு இணைவதாலும் தெய்வீகத் தன்மை பெறுகிறது.
சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் ஆதிக்கம் கொண்ட மஞ்சள், மகாலட்சுமியின் அருள் கொண்ட நெய் இவை யாவும் சேரும்போது அங்கு நல்ல அதிர்வுகள் உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகிறது.
அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது. அரிசி, உணர்வையும், சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அதனால் தான் அரிசியை கையில் தொட்டுக் கொடுக்க மாட்டார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை கொடுப்பதே நல்லது.
அரிசி என்பது உடல், மஞ்சள் என்பது ஆன்மா, நெய் என்பது தெய்வசக்தி என்பதே ஆன்றோர்கள் கூற்று. அதாவது உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம் என்பதே இதன் பொருள்.
திருமண சடங்கில் அரிசி, மஞ்சள், வெற்றிலை, சந்தனம், மலர் போன்ற மங்களப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை, மணமக்கள் பெரியவர்களின் வாழ்த்தை பெறவும், தீய சக்திகளிடம் இருந்து காத்து வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும்.
சுபநிகழ்ச்சிகளில் பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் அட்சதையைத் தூவி வாழ்த்துவார்கள். இதை மலராகக் கருதி இறைவன் திருவடியில் வைத்து வணங்கிய பின்னர் ஆசிர்வதித்துத் தூவுவதே சிறந்தது.
இதை வீசி எறிவது தவறான செயலாகும். திருமணத்தின் போது எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு சிலர் வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம். மணமக்களை வாழ்த்தி மெல்லத் தூவுவதே சிறந்தது.
புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி இதைத் தூவி வாழ்த்துவது நல்லது. இதனால் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் பெறுவார்கள்.
சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் வழிபாடுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் அட்சதை இருந்து வந்துள்ளது. பழுதில்லாத அட்சதையைப் போல எல்லா நிகழ்வுகளும் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் மகிமை ஆகும்.
மங்களங்கள் யாவும் தரும் இதை, தெய்வங்களின் அம்சம் என்பதை உணர்ந்து நல்வழியில் பயன்படுத்தி பலனைப் பெறுவோம்.