ஆன்மிக தகவல் – பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட ஆலயம்
பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட ஆலயம் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பீமேஸ்வரர் ஆலயம் ஓமந்தூர்
தென்னாடுடைய சிவனாக, எந்நாட்டவர்க்கும் இறைவனாக நம்மைக் காக்கும் பரம்பொருளுக்கு அமைந்துள்ள ஆலயம், ஓமந்தூரில் உள்ள ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீபீமேஸ்வரர் ஆலயம். பழமையான இந்தக்கோயில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்ந்துள்ளது. ஆனால் இன்று? அரசர்கள் பலர் வழிபட்ட ஆலயத்துக்கு நம் காலத்தில் ஏன் இந்த அவலநிலை என்று கேட்கத் தோன்றும். ஆயினும் அன்பர்கள் முயற்சியால் திருப்பணி தொடங்கி நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ராஜராஜசோழனால் 11ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1985-கி.பி. 1014) கட்டப்பட்டதாகவும், இந்த ஊர் ஒவ்வூர் என்று அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. சோழர்களுக்குப் பின்பு ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசர்களும், சம்புவராய மன்னர்களும் ஆலயத்துக்கு வேண்டிய திருப்பணிகளை மேற்கொண்டு இறையருள் பெற்றிருக்கிறார்கள். சம்புவராய மன்னர்களில் முதலாம் ராஜநாராயண சம்புவராயர் காலத்தில் (1337-1368) இத்தலமானது “ஒய்மா நாட்டு ஓசுந்தூர்” என அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டு விளக்குகிறது. ஒவ்வூர், ஓகந்தூர் என்பதே மருவி ஓமந்தூராக வழங்கப்படுகிறது என்பர்.
‘ஓம்’ என்பது அனைத்து தெய்வங்களுக்கும் மூல காரணமாகத் திகழும் பிரணவ மந்திரம் ‘அந்தூர்’ என்னும் சொல்லுக்கு ‘பாதகிண்கிணி’ என்று பொருள். திருக் கயிலை பரம்பொருள் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தில் அவரின் பாதக் கிண்கிணியின் ஓசை முதன் முதலில் கேட்ட இடம் இது என்பதால் இவ்வூர் ஓம் + அந்தூர். அதாவது, ஓமந்தூர் என்று அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
பஞ்ச பாண்டவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு வாழ்ந்தபோது அவர்களின் பசியைப் போக்கி, அவர் களைக் காத்தவர்கள் ஸ்ரீபீமேஸ்வரர் மற்றும் அன்னை பாலாம்பிகை என்பது புராணம்.
பாண்டவர்களில் ஒருவரான பீமன், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தால் சிவனை வழிபட்ட காரணத்தால் “ஓம் அந்தூர்” என்று அழைக்கப்பட்டதாம். பஞ்ச பாண்டவர்களின் பசியைப் போக்குவதற்கு அன்னை பாலாம்பிகை பாத்திரத்தில் தூய பசும்பாலை வழங்கிய காரணத்தால் ‘அன்னை பாலாம்பிகை’ என வழங்கப் படுகிறாள்.
மூலவர்:
ஸ்ரீபீமேஸ்வரர் மேற்கு திசை நோக்கி பிரம்மாண்ட மாக 6 அடி உயரத்தில் பெரிய லிங்கவடிவமாகக் காட்சியளிக்கிறார். மனதுக்கு தைரியத்தையும், உடலுக்கு பலத்தையும் அளிப்பதோடு, சகல தோஷங்களையும் நீக்கும் இறைவனாகவும் அருள்பாலிக்கிறார். மூலவர் கைலாயநாதனுக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் கோள்களின் பாதிப்பினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்; குறிப்பாக சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுக்கிர பகவானின் சுகப் பார்வையால் நிறைந்த செல்வமும், மனமகிழ்ச்சியும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற இவரை வணங்கி அருள் பெறுகின்றனர். பக்தர்கள். கல்வெட்டு களில் திருவருளீசுவரத்தாழ்வார், திருவீமிசுவரமுடைய நாயனார், தவப்பாதர நாயனார் என்றெல்லாம் வழங்கப்படுகிறார் ஸ்ரீ பீமேஸ்வரர்.
திருத்தலத்தின் அமைப்பு:
இத்திருக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் எனப் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகிறது.மகாமண்டபத்தில் சூரியபகவான், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ ராஜேஸ்வரி உள்ளிட்ட திருமேனிகள், பிராகார வலம் வரும்போது பலிபீடமும் பிரதோஷ நந்திதேவரும் காணப்படுகிறார். இதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானும், மயில் வாகனத்துடன் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ ஆறுமுகக் கடவுளும், நான்கு திருக்கரங் களுடன் நம்மைத் தாங்கும் சக்தியாக அன்னை ஸ்ரீ பாலாம்பிகை தேவியும் வரிசையாக
ஒருவரை அடுத்து மற்றொருவர் கிழக்கு திசை நோக்கி தரிசனம் தருகிறார்கள். இதனைத் தவிர கோஷ்டத்தில் ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணு, அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோர் அருள் புரிகிறார்கள். ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். நவகிரகங்களுக்கென்று தனிச் சந்நிதியும் உண்டு.
திருப்பணி:
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் குலதெய்வக் கோயிலான இந்த ஆலயத்துக்கு 1954ஆம் ஆண்டில் வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அமைவிடம்:
திண்டிவனம் – பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஓமந்தூர். ஓமந்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 நிமிட நடையில் இந்த ஆலயத்தை அடையலாம்.