ஆன்மிக தகவல் – பேச்சி_அம்மன்…!

5/5 - (52 votes)

சோழமன்னனுக்கு பல வருடங்கள் கழித்துக் குழந்தை பிறக்கப் போகிறது. ஆனால் அந்தக் குழந்தை ஓர் அசுரக் குழந்தை எனத் தெரிய வருகிறது. அந்தக் குழந்தை பிறந்தால், அதன் பாதம் பூமியில் பட்டால் சோழநாட்டில் மழை பொழியாது, பஞ்சம் வரும், நாடு நாசமாகும் என அரண்மனை ஜோதிடர்கள் கூறுகின்றனர்.மன்னன் செய்வதறியாது தவித்து அம்பாளைப் பிரார்த்திக்கிறான்.

ராணிக்குப் பிரசவ நேரம் நெருங்கநெருங்க மன்னனுக்குத் தன் நாட்டைக் காப்பதா? குழந்தை காப்பதா? ராணியைக் காப்பதா எனப்போராட்டம். பிரசவத்திற்கு என ராணிக்கு உதவ மருத்துவச்சிகள் வரவழைக்கப் படுகின்றனர். ஆனால் எவராலும் சரியான முறையில் ராணிக்கு உதவமுடியவில்லை. அப்போது மன்னன் எதிரே ஒரு வயதான மூதாட்டி வருகிறாள். அவள் தான் மருத்துவம் பார்ப்பதாகக் கூறவே மன்னனும் சம்மதிக்கிறான்.

மருத்துவச்சி பிரசவ வலியில் துடிக்கும் ராணியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொள்கிறாள். அவள் வயிற்றைத் தன் விரல்களால் கிழிக்க, பதறிய மன்னன் தன் அருமைராணியைக் காக்க எண்ணி வாளை ஓங்கிக்கொண்டு அந்தக் கிழவி மேல் பாய்கிறான். கிழவி அசரவில்லை. மன்னனை இழுத்துத் தன் காலடியில் போட்டுக்கொண்டு ராணியின் வயிற்றைக் கிழித்துக் கருப்பையிலிருந்து குழந்தையை எடுக்கிறாள். குழந்தையின் தொப்புள்கொடியை தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். அந்தக் குழந்தையின் சொட்டு ரத்தம் கூடப் பூமியில் சிந்தாவண்ணம் காக்கிறாள்.பின்னர் ராணியையும், மன்னனையும்விடுவிக்கிறாள்.

 மன்னனுக்கு அதன் பின்னரே உண்மைபுரிய வருகிறது. வந்தவள் வேறு யாருமில்லை. தான் அன்றாடம் வழிபட்டு வந்த அன்னையே எனத் தெரிந்து கொண்ட மன்னன் அவளை அந்தக் கோலத்திலேயே அமர்ந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுகிறான். பெரியாச்சியாக வந்த பேச்சி இதற்கு சம்மதிக்கிறாள்.பிரசவத்திற்காகக் கஷ்டப்படும் பெண்கள் தன்னை வந்து வணங்கினால்தான் துணை இருப்பதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ வேண்டியே தான் இருப்பதாகவும் உறுதியாய்க் கூறி அன்றிலிருந்து மன்னன் குலத்தையும் காத்து வருகிறாள்.

கிராமங்களில் மாரியம்மன் கோயிலில் முன் வாசலில் பேச்சியம்மன் கோயில் இருக்கும்.பேச்சியம்மன் அனுமதி வாங்கியே ஊருக்குள் உள்ள மாரியம்மனைக் காணச் செல்ல முடியும். மதுரையில், “பேச்சியம்மன் படித்துறை” என வைகைக்கரையில் ஓர் படித்துறையே உண்டு. ஆனால் அங்கே பேச்சியம்மன் பேச்சுக்கு அம்மன் என்பார்கள்.

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பல கோயில்கள் உள்ளன .

You may also like...