ஆன்மிக தகவல் – 100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான கோவில்

5/5 - (56 votes)

பத்மாவதி,  ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கு இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!

சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி  மாத சுக்ல பட்ச தசமி  திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது என்கிற வரலாற்று பெருமையுடையது நாராயணவனம் தலம்

பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் தான் நாராயண வனம். இங்கு பெருமாளும்,தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.

தலச்சிறப்பு:

இங்கு பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமணம் முடிந்த காரணத்தால் இது  கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம். இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.

பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை,

வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர் திருப்பதி.

பத்மாவதி தாயாரின் ஊர் திருச்சானூர்.

பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து நாராயண வனத்தில் எழுந்தருளியிருப்பது  காணக் கிடைக்காத அற்புதக் காட்சி

நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும். நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும்,பத்மாதி தாயாருக்கும் திருமணம் நடந்தது. உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில். இரண்டாவதுதான் திருப்பதி!

திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார். பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம் இது. இடுப்பில் உடைவாளோடும், கையில் கல்யாண காப்போடும் பெருமாள் காட்சி கொடுக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். திருப்பதி கோவிலை  காட்டிலும் இந்த கோவில்  மிகப்பழமையானது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலை தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது.

சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள்  என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும். இந்த நாராயணவனம் க்ஷேத்ரத்தை ஒருமுறை தரிசித்தால் திருப்பதிக்கு 100 முறை சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.

கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர். திருப்பதியில் ஸ்ரீநிவாசப்பெருமானை தரிசனம் செய்ய அருகில் செல்லும்போதே ஜருகண்டி, ஜருகண்டி என்று சொல்லி நம்மை நிம்மதியாக தரிசனம் செய்ய விடமாட்டார்கள். ஆனால் இந்த நாராயணவனத்தில்  இப்படிபட்ட ஜருகண்டி, ஜருகண்டி என்கிற வார்த்தைகளின்றி நாம் நிம்மதியாக பெருமாள்  மற்றும் தாயாரின்  தரிசனத்தை பெற முடிகிறது.

திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம் உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்!

இப்போதெல்லாம் இது போன்ற கையால் மாவு அரைக்கின்ற இயந்திரம் எங்கே இருக்கிறது? என்று தேடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். தரிசனம் முடித்து வெளியே வந்ததும், ருசியோ ருசியான கோயில் பிரசாதம் கிடைக்கிறது. புளியோதரையை சிந்தாமல் சிதறாமல் தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள்.

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் உள்ள பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில்  இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க  இங்கு பெருமாளை வேண்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும்,  தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

இந்த நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது. மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள். பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது. திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது

இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது. பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள். திரு வெங்கடேசப்பெருமானின் திருமணம் இந்த இடத்தில்தான் நடந்தது. அந்த திருமணத்தை காண 33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம் .

வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள்.

இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும்  திருச்சானூர் செல்லும்  வழியில் அமைந்துள்ளது. திருப்பதிக்கு செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இதை மறக்காமல் பார்த்து விட்டு செல்ல வேண்டும். இது மிக அழகான முறையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும்.

இந்தக் கோவிலில் உள்ள தெய்வங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றார்கள். இந்த கோவிலில் மிக முக்கியமான இரண்டு கடவுள் யார் என்றால் பத்மாவதியும் ஆண்டாளும் ஆவார்கள். இந்தக் கோவிலில் தரிசனம் பெறுவது மிக சுலபமான ஒன்றாகும்.

பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார். அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார்.

அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள் ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார். மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர். அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் இப்போதைய சீனிவாசமங்காபுரம் என்று கூறப்படுகிறது.

சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது. புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.

தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5 அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும்,திருமலையில் 6அடி உயரத்தில் குடும்பதலைவர் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். இம்மூன்று முர்த்திகளும் சீனிவாச பெருமாளின் ஒரே வடிவங்களே.

சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும், இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல்  சயனக் கோலத்திலும்  சேவை சாதிக்கிறார்.

நாராயணவனம் எங்கு இருக்கிறது :

ஆந்திர மாநிலம்  சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

திருச்சானூரிலிருந்து 31 கிமீ தொலைவும், சென்னையிலிருந்து  95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம்.

இத்தலத்திற்கு 7 கிமீ தொலைவில் நாகலாபுரம்  தலம் உள்ளது. இது பெருமாளின் மச்சாவதாரத் திருத்தலம். இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

You may also like...