ஆன்மிக தகவல் – லட்சுமி குபேர பூஜை

5/5 - (1 vote)

செல்வம் பெருகும் லட்சுமி குபேர பூஜை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாள் அல்லது தேய்பிறை பிரதமை திதி வரும் நாள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதும் சிறப்பானது.
வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாள் மேலும் சிறப்புவாய்ந்தது. பூச நட்சத்திர நாளும் வழி படத்தக்கதே. அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்கவும்.

பூஜைக்கான ஏற்பாடு களை முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. லட்சுமி குபேரன் படம், யந்திரம் போன்றவற்றை தூய்மைசெய்து வைத்துக்கொள்ளவும்
மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதானியம், தலை வாழையிலை போன்றவற்றை முடிந்த அளவு வாங்கிவைத்துக் கொள்ளவும்.

அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலையை விரித்து, அதில் நவதானியங்களைத் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான நீர் நிரம்பிய கலசத்தை வைத்து, அந்த நீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.
பிறகு, கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, செங்குத்தாக வைக்க வேண்டும்.

வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலதுபக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங் கரிக்க வேண்டும். அதன் பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச்சொல்லி வழிபடவேண்டும்.

ஸ்துதி தெரியாதவர்கள், ‘குபேராய நமஹ… தனபதியே நமஹ…’ என்று துதித்து, உதிரிப்பூக்களை பூஜைக் கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்தியம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்குக் கொடுப்பது சிறப்பு.

லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும் கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் நம் இல்லத்தில் செல்வம் பெருகும்.

You may also like...