Thalapathy Re-Release Theater Experience
Thalapathy Re-Release Theater Experience

HBD Super Star: தளபதி ரீ-ரிலீஸ் தியேட்டர் அனுபவம்

5/5 (18)

ரஜினியின் 74-வது பிறந்தாநாள் இன்று. அதையொட்டி ஸ்பெஷலாக `தளபதி’ படத்தை ரீ – ரிலீஸ் செய்திருக்கிறார்கள். `ரீ மாஸ்டர்’ செய்யப்பட்ட வெர்ஷனுடன் இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இது ரீ ரிலீஸ் காலம்… மறு வெளியீட்டில் பல திரைப்படங்கள் தூள் கிளப்பி வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் `கில்லி’. `தளபதி’ திரைப்படத்தை 1991-லேயே திரையரங்கத்தில் நண்பர்களுடன் சென்று பார்த்தவர்களுக்கு இந்த ரீ ரிலீஸ் நாஸ்டால்ஜியா நினைவுகளை நினைவுட்டி நெகிழச் செய்யும் ஒன்று. அதுவே `தளபதி’ திரைப்படத்தை தொலைக்காட்சிகளிலும், ஓ.டி.டி தளங்களிலும் மட்டுமே பார்த்த 2கே கிட்ஸுக்கு இந்த ரீ ரிலீஸ் ஒரு பேரனுபவம்!

தளபதி

ரஜினியின் ரசிகர்களுக்கு, இத்திரைப்படம் கொண்டாடிய நட்பு குறித்த விஷயங்களால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு, மணிரத்னம் – இளையராஜா காம்போவின் ரசிகர்களுக்கு இந்த ரீ ரிலீஸ் ஏக போக விருந்துதான். அப்படி ஒரு 2கே, தன்னுடைய `தளபதி’ திரைப்படத்தின் திரையரங்க அனுபவத்தை சொல்லும் கட்டுரை தான் இது!

யார்ரா அந்த 2கே கிட்… நான்தான் அந்த 2கே கிட்

நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்தால் பெரும் கொண்டாட்டத்திற்கான மேடையை இத்திரைப்படம் அமைத்துக் கொடுக்கும். ஆனால், அதிரடியான டிக்கெட் போட்டிகளால் ஒரு டிக்கெட் மட்டுமே கிடைத்து. காலம் கடந்து பல டிஜிட்டல் வளர்ச்சிகளை எட்டிவிட்டது என்பதை தொடக்க அனுபவமே எனக்குச் சொல்லிக் கொடுத்தது. பழைய ரஜினி திரைப்படங்களெல்லாம் தியேட்டர்களில் திரையிடுவதற்கு தாமதமாகும் சமயத்தில் `பொட்டி இன்னும் வரல’ என்று சொல்வதாகதான் நாம் கேள்விப்பட்டிருப்போம். நேற்றும் காட்சி கொஞ்சம் தாமதமானது . “33 வருஷம் பழைய திரைப்படம் தம்பி இது. இன்னும் KDM வரல” என அதற்கான காரணத்தையும் விளக்கினார் `தளபதி’ திரைப்படத்தை முதல் ரிலீஸில் தியேட்டரில் பார்த்த ஒரு பெரியவர்.

அதன் பிறகு KDM வந்தது… படத்தையும் போட்டுவிட்டார்கள். இந்த காட்சியில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் அரங்கத்திற்குள் இருந்த பெரும்பான்மையான பார்வையாளர்களெல்லாம் இளம் வயது இளைஞர்கள்தான். அதாவது `தளபதி’ படத்தை முதல் ரிலீஸில் தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள்.

`சரி…ஒரு மஜாவான அனுபவம் இருக்கு டோய்!’ என தோன்றியது. அதே குஷியுடன் பரபரப்பாக தொடங்கிய திரைப்படம் முதலில் எடுத்துமே பலரின் இதயத்தை கனமாக்கிவிட்டது. ஆம், குழந்தையை குட்ஸ் ரயிலில் ஏற்றிவிடும் காட்சியில் தாயின் பரிதவிப்பை காட்டியிருந்தார் மணிரத்னம். அதே சமயத்தில் சூர்யாவுடன் அதே குட்ஸ் ரயிலில் பயணிக்க தொடங்கியது தாய் மீதான வருத்தமும் கோபமும்.

இளையராஜாவின் `சின்ன தாயவள்’

அந்தக் காட்சியை கூடுதலாக மெருகேற்றி திரையரங்கத்தின் மெளனத்தையும் கூட்டியது இளையராஜாவின் `சின்ன தாயவள்’ பாடலின் பின்னணி இசை. அந்த குட்ஸ் ரயிலின் கூச்சல் ஒலி ஏதோவொரு மேஜிக் செய்து மனதை இறுக்கமாக்கியது. அந்த காட்சிக்கு பிந்தைய தாக்கம் `மணி ரத்னம் – இளையராஜா’ காம்போவுக்கான ஏக்கத்தையும் கூட்டியது! அதன் பிறகு இன்ட்ரோ பாடலான `ராக்கம்மா கையை தட்டு’ பாடல். துள்ளலோடு பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்த பலரும், ரஜினி தனது முடியை பறக்கவிட்டு `மத்தளச் சத்தம்’ என்ற பாட தொடங்கியதும் கொண்டாட்டம் எகிறியது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, “ மகிழ்ச்சி, சந்தோஷம், ஆச்சரியம் என அனைத்து எமோஷனுக்கும் ஸ்டாக்காக வச்சிருப்போம். அதெல்லாம் மணி சார்கிட்ட கொடுத்தால் ஒத்துக்கமாட்டேங்குறார். `ஃபீல் ஃபீல்’னு கேட்டு 10 டேக்லாம் வாங்குவார்” என நகைச்சுவையாக பேசியிருப்பார்.

பெரிய திரையில் உன்னிப்பாக கவனித்துப் பார்க்கும்போது 1991-ல் வெளியான `தர்மதுரை’ திரைப்படத்திற்கும் `தளபதி’ திரைப்படத்திற்கு நடிப்பில் அலாதியான வேறுபாடுகளை ரஜினியிடம் காண முடிந்தது. அரவிந்த்சாமிக்கு இதுதான் அறிமுக திரைப்படம். முதல் ரிலீஸ் FDFS-ல் இப்படியான வரவேற்பும் ஆராவாரமும்அவருக்கு கிடைத்திருக்காது. ஆனால், இந்த ரி – ரிலீஸ் அவருக்கும் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். ரசிகர்களும் `மெய்யழகா…மெய்யழகா’ என கத்தி அவரை கோஷமிட்டு வரவேற்த்தனர்.

எவர்கிரீன் காதல் மேஜிக்

இன்றைய தேதியிலும் இந்தப் படத்தின் எவர்கிரீன் காதல் காட்சிகள் அவ்வளவு அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் தெரிந்தது. குறிப்பாக ஒரு காவல் அதிகாரியின் கையை சூர்யா வெட்டியதும் தன்னுடைய வன்முறை செயல்கள் சுப்புவின் எண்ணத்தில் எப்படி பதிவாகியிருக்கிறது என்பதை பார்க்க தெப்பக் குளத்திற்கு சுப்புவை சூர்யா சந்திக்கச் செல்வார். அப்போது `சூர்யா இப்படிதான் இருப்பான்! ஏன் அழுகுற? பிடிக்கலையா, சொல்லு..” என சூர்யா சுப்புவின் முகத்தை திருப்புவார்.

அப்போது சுப்பு, “ பிடிச்சிருக்கு! ஆனா ஏன் ஆழுகுறேன்னு தெரில” எனக் கூறுவார். அந்த உவமை ததும்பும் காட்சிகள் இந்த 2கே கிட் மனதிலும் `பட்டர்ஃப்ளைஸை’ பறக்கச் செய்தது. ஏற்கெனவே மாபெரும் பிரிவை சந்தித்த சூர்யாவின் வாழ்க்கையில் மற்றொரு வெறுமையை சுப்புவின் பிரிவு கொடுக்கும்.

காதல் பிரிவுகளுக்கான அந்த `OG’ காட்சியில் சூர்யா சுப்புவிடம், “போ..போ..” எனக் கத்துவார். அதன் பிறகு சில்ஹவுட் ஷாட்டில் சூர்யா வருதத்துடன் நின்றுக் கொண்டிருப்பார். அந்த தருணத்தில் அரங்கத்தில் இருந்த அனைவரும் `நான் உனை நீங்க மாட்டேன்! நீங்கினால் தூங்கமாட்டேன்!’ என பின்னணி இசையின் ராகத்திற்கேற்ப இசைக்க தொடங்கி சூர்யாவின் வருதத்தில் பங்கெடுக்கும் நபரானோம்!

இதையெல்லாம் தாண்டி சூர்யா – தேவாவின் நட்புதான் இன்றைய 2கே கிட்ஸுக்கு அப்படியொரு பரிச்சயம். டாப் ஆங்கிள் ஷாட்டில் தேவாவின் என்ட்ரியிலேயே அவரின் வில்லதனத்தை பதிவு செய்துவிடுவார் மணி ரத்னம். அதன் பிறகு நியாயம் போட்டு உறுத்தியதும் மாற்றத்தை எண்ணி சூர்யாவுடன் கை கோர்பார்!.

நீ என் உயிர் தேவா..

அரவிந்த்சாமி ஒரு காட்சியில், `நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்!’ எனக் கூறியதும் `முடியாது’ என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு சூர்யாவும் தேவாவும் நடக்க தொடங்கிவிடுவார்கள். சோசியல் மீடியாவில் அதிரடி வைரலான அந்த காட்சிக்கும், `நீ என் உயிர் தேவா..’ என சூர்யா வசனம் சொல்லும் காட்சிக்கும் அப்படியொரு கூஸ்பம்ஸ் கிடைத்தது. அடுத்ததுதான் மெயின் பிக்சர்…`காட்டுக்குயிலே’ பாடல் ஒலிக்க தொடங்கியது. திரையரங்கத்தின் பணியாட்கள் அனைவரும் கதவுகளின் ஓரமாக கூடிவிட்டார்கள். பாடலுக்கு இசைத்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் தனியாக பாடலுக்கு ஸ்லோ மோஷனில் நடனமாட தொடங்கினார். அப்படி தனியாக ஆடிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு கரம் கொடுக்கும் முன் பின் அறிமுகமில்லாத தேவாவும் எழுந்துச் சென்று அந்த சூர்யாவுடன் ஆட தொடங்கி அரங்கத்தை கலகலப்பாக்கினார்.

திரையரங்கத்தின் பணியாட்களும் `டான்ஸ் ஆட முன்னாடி வாங்க!’ என மனதார அழைக்க தொடங்கினர். பலரும் ஓட தொடங்கிவிட்டார்கள். அந்த பாடல் பல தேவா – சூர்யாகளை உருவாக்கியது. அத்துடன் கொண்டாட்டம் முடியவில்லை. `ஒன்ஸ் மோர்…ஒன்ஸ் மோர்’ என்ற கோஷம் ஆப்ரேட்டர் செவியை எட்டியதும் மீண்டும் பாடலைப் போட்டு அமர்களப்படுத்தினார்.

படத்தின் தொடக்கத்தில் ஶ்ரீ வித்யாவின் கல்யாணி கதாபாத்திரத்தின் பிரிவையும் பரிதவிப்பையும் ஒரு குட்ஸ் வண்டியின் ஒலியை வைத்து பதிவு செய்திருப்பார்கள். அந்த ஒலி ஏதோ ஆறாத வடுவாக மனதை ஏதோ செய்யும். அந்த ஒலியை வைத்தே சூர்யாவும் கல்யாணிக்குமான உறவை சூசமாக ஒரு காட்சியில் பதிவு செய்திருப்பார்கள். காயமாக இறுதி வரை நகரும் கல்யாணியின் வருத்தத்தை அதே ஒலியின் உதவியால் நீக்கிய உவமையும் இந்த 2கே கிட்டுக்கு பேரானந்தத்தைக் கொடுத்தது!

அனைவரையும் வசீகரித்த ரஜினி

`Gen X, Gen Y, Gen Z, Gen Alpha’ என அனைவரையும் வசீகரித்து வைத்திருக்கிறார் ரஜினி. இதோ, அடுத்தாண்டு சினிமாவில் 50 ஆண்டுகளை எட்டவிருக்கிறார். இன்றும் அதே எனர்ஜி குறையாமல் துள்ளலோடும் துடிப்போடும் இருக்கும் ரஜினிக்கு இந்த `Gen Z’-யின் பிறந்தநாள் வாழ்த்துகள்!

2 Comments

Comments are closed