படித்ததில் பிடித்தது | மனநிறைவு…
மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கிறோம்…
அத்தோடு, இல்லாததை நினைத்து பலநேரங்களில் வருந்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு மாறாக, இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்…
இருப்பதை வைத்து நிறைவு அடைவதும், இல்லாதை நினைத்து வருத்தபடாமல் வாழும் மனமுள்ளவர்கள் எவரோ!, அவரே நோயற்ற நிலையுடன் நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்…
அன்று தென்றல் ஒரு பாறையைக் கடந்துபோனது. அது போகும்போது அந்தப் பாறையின் மேல் ஒரு சிறிய விதை கிடந்ததைக் கண்டது…
உடனே தென்றல், அந்த விதையிடம், நீ இருக்கிற இடத்தைக் கண்டாயா, அது ஒரு பாறை. அங்கு உன்னால் எதுவும் செய்ய முடியாது…!
அதனால்!, என்னோடு வந்துவிடு, நான் உன்னை பாதுகாப்பாக ஒரு நல்ல நிலத்தில் விட்டுச்செல்கிறேன். நீ வளர்ந்து பெரிய மரமாகி விடுவாய் எனக் கூறியது…
அதற்கு அந்த விதை, பரவாயில்லை, நீ உனது வழியில் செல். நான் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எப்படியாவது உயிர்வாழ முயற்சி எடுக்கிறேன் என்று கூறி, தென்றலோடு செல்ல மறுத்துவிட்டது…
தென்றலும் தன் வழியே சென்றது. ஆறுமாதம் சென்று அந்த தென்றல் அதே வழியில் வந்தது. அந்த இடத்தில் ஒரு மரத்தைப் பார்த்ததும் தென்றலுக்கு வியப்பு…!
நீ அந்த விதைதானே!, ஆறு மாத காலத்திற்குள் நீ எப்படி இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்கிறாய் என்று தென்றல் கேட்டது…
அதற்கு அந்த விதை, நான் இந்த இடத்தில் கிடைத்த ஒரு சிறிய மழைத்துளியைப் பயன்படுத்தி, என் வேரை ஊன்றினேன். பின்னர் என் வேரைப் பரப்பி இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்திருக்கிறேன்…
ஆக!, நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல., எனது மனநிலை எப்படி இருக்கின்றது என்பதுதானே முக்கியம். அதனால்தான் இன்று இவ்வளவு பெரிய மரமாக நான் உருவாக முடிந்தது என்று சொன்னது…
நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள். அது, வாழ்க்கையில் மன நிறைவையும், அமைதியையும் ஏற்படுத்தும்…!
கிடைத்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்ப்படும். மகிழ்ச்சியான நாட்களைத் தொடங்க, காலை எழுந்ததும் நமக்கு இருப்பதை வைத்து மனநிறைவு கொள்ளவேண்டும்…!!
இவற்றை நாம் கடைபிடித்தால் நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!