இந்தியாவில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர பொதுவான நுழைவுத் தேர்வாக க்யூட் தேர்வு உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இத்தேர்வு தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படுகிறது. க்யூட் தேர்வில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தொழில்நுட்ப கோளாறு, கலப்பு தேர்வு முறை, முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என பல்வேறு சிக்கல்கள் எதிர்கொள்ளப்பட்டன. இதனை முறைப்படுத்தும் விதமாக யுஜிசி நிபுணர் குழு அமைத்து, 2025ஆம் ஆண்டு க்யூட் தேர்விற்கான புதிய நடைமுறையை வெளியிட்டுள்ளது.
CUET UG 2025 Major Changes
மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் க்யூட் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மாற்றங்களின் படி, அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் 12-ம் வகுப்பில் எந்த பாடத்திலும் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு எழுதலாம், கணினி வழியில் மட்டுமே தேர்வு உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ள க்யூட் மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
CUET தேர்வு என்றால் என்ன?
தேசிய அளவில் மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் சேருவதற்கு க்யூட் (CUET) என்னும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். 2022-ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒரே நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இத்தேர்வு தேசிய தேர்வு முகமையினால் (NTA) நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டு வரை 283 பல்கலைக்கழகங்கள் க்யூட் தேர்வு மதிப்பெண்கள் மூலம் மாணவர் சேர்க்கையில் ஈடுப்பட்டுள்ளனது.
CUET தேர்வு முறை என்ன?
க்யூட் தேர்வு 63 பாடங்களுக்கு நடத்தப்பட்டது. இதனால் இத்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 13.5 லட்சம் மாணவர்கள் க்யூட் தேர்வை எழுதினர். 75 கேள்விகள் கொண்டு 105 நிமிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. பொது தாள் 60 நிமிடத்திற்கும், பாடப்பிரிவு தாள் 45 நிமிடத்திற்கு என ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த முறை நடைபெற்ற தேர்வில் 48 பாடங்கள் கணினி வழி தேர்வாகவும், 15 பாடங்கள் காதிக முறையிலும் நடைபெற்றது.
CUET தேர்வில் மாற்றங்கள் கொண்டுவர காரணம் என்ன?
பொதுவான நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் க்யூட் தேர்வு தொடக்கப்பட்ட முதல் ஆண்டே தொழில்நுட்ப கோளாறை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும், ஒரே நாளில் தேர்வு என்று இல்லாமல் தேர்வு நாட்கள் பிரிவுக்கப்பட்டு பல்வேறு ஷிபிட்-களில் தேர்வு நடத்தப்பட்டது. இதன் காரணமாக தேர்வு மதிப்பெண்களை நார்மலைசேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு டெல்லியில் தேர்விற்கு முந்தைய நாள் இரவு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல்துறை பாடங்களுக்கு ஹைபிரிட் முறை தேர்வு நடைபெற்றதால், முடிவுகள் வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக யுஜிசி க்யூட் தேர்வை முறைப்படுத்த நியுணர் குழு அமைத்தது. அந்த குழுவின் அறிக்கையின்படி, தேர்வில் புதிய மாற்றங்களை கொண்டுவரப்படுகிறது.
CUET தேர்வில் புதிய மாற்றங்கள் என்னென்ன?
கணினி வழியில் மட்டும் தேர்வு
ஹைபிரிட் முறை தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், இனி கணினி வழியில் மட்டுமே க்யூட் தேர்வு நடைபெறும்.
பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு
முதலில் க்யூட் தேர்வு 63 பாடங்களுக்கு நடத்தப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு இனி 37 பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். இதர பாடங்களுக்கு General Aptitude Test (GAT) மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விரும்பும் பாடத்திற்கு தேர்வு எழுதலாம்
உயர்கல்வியில் யுஜிசி கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்படி, 12-ம் வகுப்பில் படிக்கும் பாடப்பிரிவைதான் உயர்கல்வியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம் என நடைமுறைப்படத்தப்பட உள்ளது. அந்த வகையில், க்யூட் தேர்வில் 12-ம் வகுப்பில் பாடப்பிரிவிற்கு ஏற்ற பாடங்கள் என்று இல்லாமல், மாணவர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து எழுதலாம். முந்தைய தேர்வில் 6 பாடங்கள் வரை தேர்வு செய்யலாம் என இருந்தது. தற்போது அது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
60 நிமிடங்கள் மட்டுமே தேர்வு
கடந்த ஆண்டுகளில் 105 நிமிடங்கள் தேர்வு நடைபெற்ற நிலையில், இனி 60 நிமிடங்கள் மட்டுமே தேர்வு நடைபெறும். மேலும், அனைத்து கேள்விக்கும் விடை அளிக்கும் விதமாக வினாத்தாள் அமையும்.
வரும் கல்வி ஆண்டு 2025 நடைபெறவுள்ள க்யூட் தேர்வின் முதல் இந்த புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் க்யூட் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதினாலும், தேர்வின் வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர்களின் உயர்கல்வி நலனை கருதியும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ம் அடிப்படையில் உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.