தற்போது பெருமளவிலான விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்தை விரும்பி செய்து வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் போன்றவை பயன்படுத்தாமல் இயற்கையில் கிடைக்கும் இலை, தழைகள், மண்புழு உரங்கள், பஞ்சகாவியம் கொண்டு விவசாயம் செய்வதை அதிகளவிலான விவசாயிகள் தற்போது கையில் எடுத்துள்ளனர்.
அந்த வகையில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அதன் உற்பத்தியை பெருக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்வதை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களான துளசி மல்லி, தங்கச்சம்பா, மணிச்சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, இரத்தசாளி, சீரகச் சம்பா, காட்டு யானம், இலுப்ப பூ சம்பா, ஆத்தூர் கிச்சடி சம்பா, மைசூர் மல்லி, கருங்குறுவை போன்ற பல்வேறு நெல் ரகங்களை இயற்கை முறை விவசாயத்தில் தற்போது விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பாரம்பரியமிக்க இந்த நெல் ரகங்களில் அதிக அளவிலான ஊட்டச்சத்தும், புரதமும் நிறைந்திருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளது.
இவற்றில் மற்ற எந்த அரிசியை காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் நாற்சத்துகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு தோல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அரிசியில் உள்ள ஆந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுத்து அவர்களுக்கு சிறிது நோய் நிவாரணம் அளிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்ப அவர்கள் இந்த அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளை வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக் கொள்வதால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதை தடுத்து உடல் தசைகளின் இறுக்கத்தன்மையை அதிகரித்து உடல் வலிமையைக் கூட்டுகின்றது.
டெல்டா மாவட்டங்களை பொருத்தவரையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவில் தற்போது இயற்கை சாகுபடி முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதிலும் குறிப்பாக தற்போது திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஆதிரங்கம், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் கொரடாச்சேரி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் இயற்கை சாகுபடி முறையில் பயிரிடப்படும் கருப்பு கவுனி நெல் ரகமானது 135 முதல் 140 நாட்களுக்கு அறுவடைக்கு தயாராகும் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
மேலும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்து வரும் விவசாயி விஜயகுமார் இது குறித்து கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை 3 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகிறேன். முதல் ஒன்று,இரண்டு ஆண்டுகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து தற்போது நல்ல வகையான மகசூல் கிடைத்து வருகிறது பாரம்பரிய நெல்களை விரும்பி சாப்பிடுவோர் வாங்கிச் செல்கின்றனர். கருப்பு கவுனி அரிசி சில்லறை வியாபாரத்தில் ஒரு கிலோ 140 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுடைய இளம் விவசாயிகளுக்கு தேவையான விதை நெற் கதிர்களை இலவசமாக வழங்கி வருவதாகவும் விவசாயி விஜயகுமார் தெரிவித்தார்.