ரயில்கள் எப்போதுமே, பகல் நேரத்தைவிட இரவில் வேகமாக செல்ல என்ன காரணம் தெரியுமா? ரயில்களின் கடைசி பெட்டிகளில் X என்ற குறியீடு எழுதப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? அவசியம் இதை தெரிந்து கொள்ள வேண்டும். ரயில்களில் முன்பகுதியில் அல்லது கடைசி பகுதியில் பொதுப்பெட்டிகளை சேர்க்க நிறைய காரணங்கள் உள்ளன.
எப்போதுமே பயணிகளின் நலனை ரயில்வே நிர்வாகம் கருதுகிறது. விபத்து ஏற்பட்டுவிட்டாலோ, அல்லது தடம் புரண்டுவிட்டாலோ, தீ விபத்து போன்ற ஆபத்து ஏற்பட்டுவிட்டாலோ, இதுபோன்ற அவசர காலங்களில், மக்களை விரைவாக வெளியேற்ற வசதியாகவே இப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
கடைசிப்பெட்டி: ரயில்களில் எளிதாக அடையாளம் கண்டு பொதுப்பெட்டியில் மக்கள் உடனடியாக ஏறிவிடவும் முடியும்.. பொதுப்பெட்டிகள் கடைசியில் இருந்தால்தான், அவசரத்தில் ஓடிவந்து ரயில் ஏறுபவர்களுகூட, இந்த பொதுப்பெட்டிகளில் ஏறிவிட முடியும். அதனால்தான், ரயிலில் பொதுப்பெட்டிகள் முன்னாடியும், கடைசியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ரயிலின் எடையை சமமாக பராமரிக்கவும் முடியும் என்கிறார்கள். அதேபோல, ரயிலின் கடைசி பெட்டியில், மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் ‘X’ என்ற குறியீடு இடப்பட்டிருக்கும்… இந்த குறியீடு இருந்தாலே, அது கடைசி பெட்டி என்று எடுத்துக் கொள்ளலாம். சில ரயில்களில் LV என்று எழுதியிருக்கும். ‘Last Vehicle – LV’ அதாவது கடைசிப் பெட்டி என்பதுதான் விரிவாக்கமாகும்.
சிவப்பு விளக்கு: இந்த ‘X’ குறியீட்டின் கீழேயே, சிவப்பு நிற விளக்கு இருக்கும். இதுவும் கடைசிப் பெட்டி என்பதை குறிப்பதற்காகவே பொருத்தப்பட்டுள்ளது.. பகல் நேரத்தில், ‘X’ என்ற குறியீட்டை வைத்தும், இரவில் சிவப்பு நிற விளக்கு ஒளிர்வதை வைத்தும் அது கடைசிப்பெட்டி என்பதை அறிந்து கொள்ளலாம். அதேபோல, பெட்டிகளின் இணைப்பில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, ரயில் பெட்டிகள் சில இணைப்பிலிருந்து விலகிவிட்டாலும்கூட, ‘X’ என்ற குறியீடும், சிவப்பு நிற விளக்கை வைத்து, கடைசி பெட்டி எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நடமாட்டம்: அதேபோல, பகலை விட இரவில் ரயில்கள் விரைவாக செல்ல என்ன காரணம் தெரியுமா? ரயில் தண்டவாளங்களில் இரவில் எந்த நடமாட்டமும் இருக்காது.. முக்கியமாக ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்காது. மேலும், தொலைவில் இருக்கும் சிக்னலையும், ரயிலின் பைலட்டுகளால் தெளிவாக பார்க்க முடியும். அதனால்தான், இரவில் ரயில்கள் வேகமாக செல்கின்றன.