திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து 2வது நாளாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றிய இடங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை என்பது இன்று காலை வரை விடவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடையிடையே கனமழையும் பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.
இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 50.4 செமீ, நாலுமுக்கு, தெற்கு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் 26. செமீ, சுத்தமல்லியில் 24 செமீ, விக்கிரமசிங்கபுரத்தில் 22 செமீ, பாப்பாக்குடியில் 22 செமீ மழை பதிவாகி உள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது.
அதேபோல் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‛‛தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ராமநதி, கடனாநதி பகுதிகள் மற்றும் காட்டாறுகள், கால்வாய்கள் மூலம் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் காரணமாக தாமிரபரணி சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சுமார் 41,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை என்ற போதிலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அவ்வப்போது வழங்கிடும் எச்சரிக்கைகளை ஏற்று நடந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைத்திடவும் வீடுகளில் போதிய அளவு குடிநீர் மற்றும் அவசரகால பயன்பாட்டுப் பொருட்கள், தேவையான மருந்து மாத்திரைகள், இருப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அவ்வப்போது வழங்கப்படும் எச்சரிக்கைகளை கவனித்து செயல்படவும், தாழ்வான பகுதிகள் இருப்பவர்கள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் முகாம்களுக்கு சென்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இன்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‛‛13.12.2024 கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வெள்ளம் செல்வதால் தாழ்வான பகுதகிளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.