வங்கக் கடலில் நிலவி வரும் பெஞ்சல் (பெங்கல்) புயல் தற்போது அது கரையை கடக்கும் இடத்தில் மாற்றம் இருக்கலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் பெஞ்சல் (பெங்கல்) புயலானது சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகலஸ் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கட்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. பயங்கர காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் இந்த புயலானது பிற்பகல் கரையை கடக்கும் என சொல்லப்பட்ட மாலைதான் கரையை கடக்கும் என சொல்கிறார்கள்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புயல் தற்போது புதுவைக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த புயல் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு 7 மணி வாக்கில் சென்னை – புதுவை இடையே மரக்காணம் – மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க தொடங்கும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும்.
அது போல் குறுகிய காலத்தில் அதிமழை பொழிவும் இருக்கும். தரைக்காற்றின் வேகமும் மழைப்பொழிவும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். எனவே சென்னை முதல் புதுவை வரையிலான பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழை படிப்படியாக தொடங்கும் என ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது மரக்காணம் டூ மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார். இந்த பெஞ்சல் புயலால் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. அது போல் மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளதால் அவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். புதுவை, கடலூர் கடற்கரைகளில் 7 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்புகின்றன. தற்போது பெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
Comments are closed