Chennai Rain Alert : சென்னையில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. புயலாக உருவாக வாய்ப்பில்லை என்றாலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாக மக்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் என வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது.
கொட்டித்தீர்த்த கனமழை
இதன் காரணமாக சென்னை உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில் சுமார் 9 மணி அளவில் சென்னை, மாங்காடு, திநகர், எழும்பூர், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையானது கொட்டித்தீர்த்தது. மெரினா, கிண்டி, வேளச்சேரி, பெருங்களத்தூர், வேளச்சேரி, வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
பகல் 1 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்வோர் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையில் வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நிற்பதால் மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
மழைநீர் தேங்கவில்லை
சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் ஓரளவு நிறைவு பெற்றுள்ளதால் மழைநீர் நிறைய பகுதிகளில் தேங்கவில்லை. மழைநீர் தேங்கினாலும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட தொடங்குகிறார்கள்.
அலுவலகம் செல்வோர்
தமிழகத்தில் முக்கியமாக சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அலுவலகம் செல்வோர் கவனமாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அலுவலத்தில் வீடு திரும்பும் போதும் கவனமாக செல்ல அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Pingback: வெள்ளத்தில் தத்தளிக்கும் திருநெல்வேலி தாமிரபரணியில் 50,000 கனஅடி தண்ணீர் | செய்திகள் Latest News Stories from Thiruva