Tamil Nadu Gold Price Skyrocketed
Tamil Nadu Gold Price Skyrocketed

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்வு

5/5 - (5 votes)

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருகின்ற நிலையில், இனிமேல் தங்கம் என்பது ஏழைகளால் வாங்கவே முடியாதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சில வாரங்களாக தங்கத்தின் விலையில் சற்று குறைவாக இருந்து வந்த நிலையில் சென்னையில் ஒரு கிராம் விலை 6,980 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. மும்பையில் 7 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 22 கேரட் தங்கத்தின் விலையே இப்படி என்றால் 24 கேரட் தங்கம் ஏழைகளின் எட்டாக்கனி என்ற நிலையை முன்பே அடைந்துவிட்டது.

பல முதலீடுகள் நிலைத்தன்மை இல்லாமல் தள்ளாடும் போது தங்கத்தின் விலை மட்டும் எப்படி இந்தளவுக்குச் சர்வதேச அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன் பின்னால் உள்ள வர்த்தகம் என்ன? வணிகம் என்ன? அதைப்பற்றி பேசிய பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம், “தங்கம் விலை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. விலை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சீனா தங்க முதலீட்டுக்கு மறுபடியும் மாறியுள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் அடிவாங்கி இருக்கிறது. ஆகவே சாதாரண மக்களின் கவனமும் தங்கத்தின் மீது விழுந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இஸ்ரேல் போரினால் பொருளாதாரத்தில் ஒரு தடுமாற்றம் உண்டாகி இருக்கிறது. இன்னொரு பக்கம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீடித்துக் கொண்டுள்ளது. இதனால் டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. அதில் நிலைத்தன்மை இல்லை. இதனால் தங்க முதலீடு கூடி இருக்கிறது” என்கிறார்.

இவரை விட பல நுட்பமான விசயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார் பங்குச் சந்தை ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீநிவாசன். என்ன சொல்கிறார் அவர்? “வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை ஏறி இருக்கிறது. அதற்குக் காரணம் அமெரிக்காவில் வட்டிவிகிதம் குறைந்துள்ளது. வரும் 18 மாதங்களுக்குள் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்தைத் தொட்டுவிடும். நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டியை குறைத்த பிறகும் தங்கம் ஏன் விலை ஏறுகிறது என பலருக்கு என்ன சந்தேகம் உள்ளது. அவர் 9% வரியைக் குறைத்தார். அதனால் 300 முதல் 400வரை விலை குறைந்தது. அவர் ஒருவேளை குறைக்காமலிருந்திருந்தால், இன்று கிராம் 7,300 ஐ தொட்டு இருக்கும். அதைத்தாண்டி நிதியமைச்சர் ஏன் தங்கத்தின் வரியைக் குறைத்தார் என்றால், தங்கப் பத்திரம் முதலீடு என ஒரு திட்டத்தை அரசு தொடங்கியது. அந்தப் பத்திரங்கள் முதிர்ச்சி பெற்று மக்கள் முதலீட்டை திரும்ப எடுக்கும் காலம் கணிந்துவிட்டது. இப்போது விலை அதிகமாக இருந்தால், அதிக வட்டி தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கும். ஆகவே வரியை குறைத்தார். இனிமேல் தங்கப் பத்திரம் முதலீடு திட்டம் இருக்காது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவிற்குள் 10 பில்லியன் டாலர் தங்கம் வந்தது. தங்கத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதைதான் இது காட்டுகிறது. ரூபாயின் மதிப்பு குறைந்துவருவதும் கூட தங்கம் விலை ஏறுவதற்குக் காரணம். கடந்த மாதம் மட்டும் இந்தியா ஏற்றுமதி செய்ததற்கும் இறக்குமதி செய்ததற்குமான பற்றாக்குறை 30 பில்லியன் டாலர். இதில் சாஃப்ட்வேர் துறை சேர்க்காமல் சொல்கிறேன். அதில் ஏற்றுமதி செய்வது 30 பில்லியன் டாலர். இறக்குமதி 15 பில்லியன் டாலர். இந்தப் பற்றாக்குறை என்பது ரூபாயைப் பாதிக்கும். இந்த மாதம் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 84 ரூபாய்க்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏறவிடாமல் ஆர்பிஐ தன் வசம் இருந்த டாலரை விற்று காப்பாற்றியது. அடுத்த 2 வருடங்களில் ரூபாயின் மதிப்பு 85க்கு சென்றுவிடும். ஒரு பக்கம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. மற்றொரு பக்கம் தங்கத்தின் விலை ஏறும். இதை வைத்தே சொல்கிறேன். வரும் காலங்களில் கிராம் 8,500க்குப் போகலாம்.

அதனால்தான் கடந்த 5 வருடங்களாகவே தங்கம் விலை ஏறப்போகிறது என்று தொடர்ந்து பேசி வந்துள்ளேன். இப்போது இல்லை என்றாலும் வரும் காலங்களில் அது 10 ஆயிரம் போகலாம். இனிமேல் விலை குறைய வாய்ப்பு என்பதே இல்லை. இதை கவனத்தில் கொண்டுதான் 18கேரட் தங்கம் 9 கேரட் தங்கத்திற்குக் கூட ஹால்மார்க் முத்திரை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 22கேரட் தங்கம் என்பது எளிய மக்களால் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அதற்கு இந்த மாற்று ஏற்பாடு உதவக்கூடும். இப்போதைக்கு 22 கேரட் தங்கம் தான் பாதுகாப்பானது. இந்தியாவில் திருமணக் காலம் தொடங்கிவிட்டது. ஆகவே விலை குறைவு என்பதற்கு வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் இல்லை” என்கிறார்.