தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தையொட்டி பள்ளி மாணவர்களுகு சில முக்கிய அறிவுறுத்தல்களை மின்வாரிய அதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை 2024 ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை தேசிய மின்சார பாதுகாப்பு வார பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுகிறது.
மின்சார பாதுகாப்பு
அந்தவகையில், இந்த வருடம் கருப்பொருளான, “பள்ளியிலிருந்து பாதுகாப்பு தொடங்குகிறது” என்கிற மைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மின்சார பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு, அதன் முக்கியத்துவத்தை மின்வாரிய அதிகாரிகள் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: “தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி குழந்தைகளுக்கு கோட்ட மின் ஆய்வாளர்கள் மூலம் பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுதவிர, வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டிற்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு உரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்..
விழிப்புணர்வு
வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார அபாயங்கள் பற்றிய எச்சரிக்கை அறிகுறிகளுக்கு கீழ்ப்படியுங்கள் உள்ளிட்ட அறிவுரைகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம்.
அதன்படி மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது. சுவிட்சை ஆஃப் செய்த பிறகே பிளக்கினை சொருகவோ, எடுக்கவோ வேண்டும். மின்கம்பங்கள் மீதோ, அதன் அருகேயுள்ள மரங்களின் மீதோ ஏறவேண்டாம். எச்சரிக்கை பலகைகள் இருக்குமிடங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், கம்பி வேலிகள், மின் பெட்டிகளை தொடக்கூடாது. மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது.
மின்சுமை
அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஒரே சாக்கெட்டில் அதிக சாதனங்களை சொருகுவதின் மூலமாக மின்சுமை ஏற்றுவதை தவிர்க்கவும். மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் வேலைசெய்யும் கிரேன்கள் மற்றும் மொபைல் பிளான்ட்களில் இருந்து விலகி இருக்கவேண்டும். எலக்ட்ரிகல் சாக்கெட்டுகளில் விரல்களையோ, கம்பி, குச்சி போன்ற பொருள்களையோ சொருக வேண்டாம். சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இடியுடன் கூடிய மழையின்போது திறந்தவெளிகள், மரங்கள் மற்றும் மின்கம்பி பாதைகளை தவிர்க்க வேண்டும்.
பிரசுரங்கள்
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மின்சார பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள், தகவல் கையேடுகள், மின் பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய பிரசுரங்களை வழங்குகிறோம்.
மின்சாரம் பற்றிய அடிப்படை கருத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், சாத்தியமான ஆபத்துகளை அடையாளம் காண உதவுவதற்கும், மின்சார விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் கருத்தரங்குகள் மற்றும் விளக்கக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
Comments are closed