இந்திய மக்கள் ஏற்கனவே டோல் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகப் புலம்பி வரும் வேளையில், சமீபத்தில் சில இடங்களில் இதை அதிகரித்துள்ளது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்டேக் மூலம் டோல் கட்டண வசூலிப்பு முறையில் மாற்றம் கொண்டு வர தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI) புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வாகனத்தின் விண்ட்ஷீட்டு அதாவது கண்ணாடி மீது FASTag ஸ்டிக்கர் ஒட்டாமல் இருந்தால், டோல் கட்டணத்தை இரட்டிப்பாகச் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட FASTag என்பது RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டணம் வசூலிக்கும் முறை ஆகும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டில் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் FASTag கட்டாயம் தேவை. இதை பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தும் காரணத்தால் டோல் கேட்டில் காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்துள்ளது.
ஆனால் சில வாகன உரிமையாளர்கள் FASTag ஸ்டிக்கரை தங்களது வாகனங்களின் விண்டுஷீல்ட்-ல் ஒட்டுவது இல்லை, இதனால் வாகனங்கள் டோல் கேட்டில் தாமதத்தை ஏற்படுத்தி, மற்ற வாகன ஓட்டுநர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
டோல் கேட்டில் வாகன ஓட்டுனர்கள் FASTag ஸ்டிக்கரை கையில் வைத்துக்கொண்டு, டோல் ஊழியர்கள் மூலம் கட்டணத்தை செலுத்து நிலை உள்ளது. இதனால் ஆட்டோமேட் முறை தடை பெற்று மேனுவலாக மாறுகிறது. இந்த புதிய வழிமுறையை இந்தியா முழுவதும் உள்ள டோல் கேட்டில் விரைவில் அமல்படுத்தவுள்ளதாகத் தெரிகிறது, இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூரவ்மாக வர உள்ளது.
மேலும் வாகனத்தின் விண்ட்ஸ்கிரீன் மீது FASTag ஸ்டிக்கரை ஒட்டாமல் இருப்பவர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாகன ஓட்டுனர்கள் ஏன் விண்ட்ஸ்கிரீனில் FASTag ஸ்டிக்கரை ஒட்டவது இல்லை என ஆய்வு செய்து பார்க்கும் போது, வாகன ஓட்டுனர்கள் சிலர் தங்கள் வாகனங்களின் விண்ட்ஸ்கிரீனை ஸ்டிக்கர்களால் நிரப்ப வேண்டாம் என்று நினைப்பது முதல் பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும் சிலர் வாகனங்களுக்கு வெவ்வேறு FASTag களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே, இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும், இதுபோன்ற வாகனங்களை பிளாக்லிஸ்ட் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.