Aadi-Masam
Aadi-Masam

ஆடி மாத சிறப்பு கட்டுரை

5/5 (6)

ஆடி மாதத்தில் இந்த தினங்களை மறந்து விடாதீர்கள்!

தமிழ் மாதங்களில் எந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் ஆடி மாதத்துக்கு உண்டு. ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது. குடும்பத்துக்கு அச்சாணியாக திகழும் பெண்கள் ஆடி மாத வழிபாடுகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களது குடும்பம் மேம்படும் என்பது ஐதீகமாகும்.

ஆடி மாதத்தில் வரவிருக்கும் இந்த முக்கிய விரதங்களை மறந்து விடாதீர்கள்!!

ஆடி செவ்வாய்

செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு உகந்த இந்நாளில் முருகனை வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அதிலும் ஆடி செவ்வாய் என்றால் அம்மனுக்கும், முருகனுக்கும் ஏற்ற நாளாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் ஒளவையார் விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

ஆடி வெள்ளி

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் சிறப்பு. அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமையிலும் வழிபட முடியாதவர்கள், குறைந்தபட்சம் ஒரு வெள்ளிக்கிழமையாவது வழிபட வேண்டும். இந்த ஆடி வெள்ளிக்கிழமைகளில், அம்மனை வேண்டி யார் விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆடி பௌர்ணமி

பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. அன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.

ஆடி பௌர்ணமியில் அம்பிகை மற்றும் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும். பெரும்பாலானோர் தங்களின் வீடுகளில் சத்யநாராயண பூஜை செய்கின்றனர்.

ஆடி கிருத்திகை

குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி திதியிலும், திருமண வரம் வேண்டுவோர் கிருத்திகை நட்சத்திரத்திலும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமையிலும் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் கை மேல் பலன் கிடைக்கும். இந்த கிருத்திகை நட்சத்திரம் ஆடி மாதத்துடன் சேர்ந்து வரும் போது இன்னும் அதிக சிறப்பு பெறுகிறது. ஆடி கிருத்திகை அன்று முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும். ஆடி கிருத்திகை அன்று விரதம் இருக்கும் பக்தர்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபட்டால் நற்பலனைப் பெறலாம்.

ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான நாளாக ஆடிப்பெருக்கு விழா கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு என்பது மிகவும் அற்புதமான நாள். இந்த நாளில், மனதார வேண்டிக்கொண்டு செய்யும் எந்த காரியமும் வெற்றி அடையும். இரட்டிப்பு பலன்களையும் தரும் என்பது நம்பிக்கை.

அதனால் தான் ஆடிப்பெருக்கு நாளில் விதைகள் விதைத்து விவசாயத்தை துவங்குவது, வீட்டில் மங்களப் பொருட்களை வாங்கி வைப்பது, திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்களை துவங்குவது ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

ஆடி அமாவாசை

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைபிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. இதில் மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்திற்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும்.

ஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் அன்னையை வழிபட்டு, அவளின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாட்களில் ஒன்று ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாள் அவதரித்த தினம் தான் ஆடிப்பூரம். அதாவது, ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பூதேவியின் அம்சமான ஆண்டாள் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டாளின் நினைவாகவே ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூர நன்னாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, குங்கும காப்பு, வளைகாப்பு, வளையல் அலங்காரம் ஆகியவை நடத்தப்படுகிறது.

நாக சதுர்த்தி

கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. நாக சதுர்த்தி விரதம் என்பது ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குவதாகும். தங்கள் கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும்.

கருட பஞ்சமி

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுசரிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்கும். 

கருடனை போல பலசாலியாகவும், புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய திருமணமான பெண்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

வரலட்சுமி விரதம்

ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கள வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.