Tiruchendur Murugan Skanda Sashti Festival
Tiruchendur Murugan Skanda Sashti Festival

நவம்பர் 2-ல் கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் கோயிலில் முருகனை தரிசிக்க ரூ 1000 கட்டணம்

5/5 - (6 votes)

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசனம் செய்ய விரைவு தரிசனம் கட்டணம் என ரூ 1000த்தை நிர்ணயம் செய்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த விழாவையொட்டி தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

பலர் வெளிநாடுகளில் இருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். சூரனை முருகன் வதை கொள்ளும் காட்சிகள் கடற்கரையில் நடைபெறும். அது போல் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள விரைவு தரிசன கட்டணமாக ரூ 1000 என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி பொது தரிசனம், ரூ 100 சிறப்பு தரிசனம் ஆகிய தரிசனங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால் தற்போது விரைவு தரிசனம் என்ற பெயரில் ரூ 1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் கடந்த ஆண்டும் விரைவு தரிசனம் என்ற பெயரில் ரூ 1000 வசூலிக்கப்பட்டது. அது போல் விஸ்வரூப தரிசனம் ரூ 2 ஆயிரம், யாகசாலை அருகே அமர்ந்து பார்க்க ரூ 3 ஆயிரம், அபிஷேக கட்டணம் ரூ 3 ஆயிரம் என வசூலிக்கப்பட்டது. கட்டண உயர்வால் கடவுள் முன்பு எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் சமம் என்ற தத்துவத்தையே சிதைத்துவிட்டார்கள் என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருச்செந்தூர் கோயிலுக்கு மாதம் ரூ 3 கோடிக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். அதில் 10 சதவீதம் கூட கோயில் நலனுக்காக நிர்வாகம் செலவு செய்யவில்லை. பக்தர்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆனால் கட்டணத்தை மட்டும் பல மடங்கு உயர்த்திவிட்டதாக” பலர் விமர்சித்திருந்தனர். திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதை தடுக்கவே இது போல் கட்டண உயர்வு என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.