CSK IPL 2024
CSK IPL 2024

ஐபிஎல் தொடரில் பெஸ்ட் அணியாக இருக்கும் சி.எஸ்.கே. புள்ளி விபர தகவல்கள்

5/5 - (5 votes)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெஸ்ட் அணி என்று பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் என புள்ளி விபரங்கள் மூலமாக தெரியவருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. தோனியின் தலைமையில்தான் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை ஐபிஎல் தொடரில் கைப்பற்றியுள்ளது.

சென்னை அணியின் வெற்றி சதவீதத்தை பார்க்கும்போது மற்ற அனைத்து அணிகளை விடவும் அதிகமாக காணப்படுகிறது. ஐபிஎல்லில் இதுவரை சென்னை அணி ஒட்டுமொத்தமாக 225 போட்டிகளில் விளையாடி 131 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 59 ஆக உள்ளது. இதேபோன்று மும்பை அணி ஒட்டுமொத்தமாக 247 போட்டிகளில் விளையாடி 138 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 56.7 ஆக உள்ளது.

இந்த புள்ளி விபரத்தில் குறைந்தது 150க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய அணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 2 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்டு 33 போட்டிகளில் விளையாடி 23 போட்டிகளில் வென்றுள்ளது. வெற்றி சதவீதம் 69.7.

இதேபோன்று 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மற்றொரு அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி சதவீதம் 58.6 ஆக வைத்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ள சென்னை தான் பெஸ்ட் அணியாக இருந்து வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் போட்டி அட்டவணை முதற்கட்டமாக மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மொத்தம் 21 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 74 போட்டிகளைக் கொண்டதாக நடத்தப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.