இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் ஜார்கண்ட் அணி உலகிலேயே எந்த அணியும் செய்யாத டி20 சாதனையை படைத்து இருக்கிறது. இந்திய அளவிலான 2024 சையது முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சி பிரிவில் இடம்பெற்று இருந்த ஜார்கண்ட் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து 94 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஜார்கண்ட் அணி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை செய்தது.
வெறும் 4.3 ஓவர்களில் 94 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜார்கண்ட். அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷன் 23 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். அவர் 5 ஃபோர் மற்றும் 9 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது சைக்ரேட் 334.78 ஆக இருந்தது. மற்றொரு துவக்க வீரர் உத்கர்ஷ் சிங் 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.
4.3 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்ததன் மூலம் ஜார்கண்ட் அணி உலக சாதனை படைத்தது. இஷான் கிஷன் சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் வரலாற்று சாதனை படைத்தார். இதுவரை உலக அளவில் ஒரு டி20 போட்டியில் ஒரு ஓவருக்கும் அதிகமாக பேட்டிங் செய்து அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த அணிகளின் பட்டியலில் ஜார்கண்ட முதல் இடத்தை பிடித்து உள்ளது.
இந்தப் போட்டியில் ஜார்கண்டின் ஸ்ட்ரைக் ரேட் 20.8 ஆக இருந்தது. 4.3 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஸ்ட்ரைக் ரேட்டை ஜார்க்கண்ட் அணி பெற்றது. இதற்கு முன் 2021 ஆம் ஆண்டு செர்பியாவுக்கு எதிரான போட்டியில் ரோமானியா அணி 5.4 ஓவர்களில் 116 ரன்களை எடுத்து இருந்தது சாதனையாக இருந்தது.
அந்த போட்டியில் ரோமானியாவின் ஸ்ட்ரைக் ரேட் 20.47 ஆக இருந்தது. அந்த சாதனையை ஜார்கண்ட் முறியடித்து இருக்கிறது. இந்த போட்டியில் இஷான் கிஷன் 23 பந்துகளில் 77 ரன்கள் அடித்ததன் மூலம் சையது முஷ்டாக் அலி தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் அன்மோல்ப்ரீத் சிங் 334.61 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்து இருக்கிறார் இஷான் கிஷன். மேலும், இந்திய பேட்ஸ்மேன்களில் ஒரு டி20 இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் இஷான் கிஷன்.
2014 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று போட்டியில் 25 பந்துகளில் 87 ரன்கள் அடித்ததே இந்திய வீரர் ஒருவர் டி20 போட்டியில் கொண்ட அதிக ஸ்ட்ரைக் ரேட் சாதனையாக உள்ளது. அந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 348 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்து இருந்தார்.