தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல புதிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்பதும் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம்:
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.