Scorching Heat
Scorching Heat

பங்குனிக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் – கவனம்

5/5 (12votes)

மாசி மாதத்திலேயே தலை சூடாகும் அளவிற்கு பல ஊர்களில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. ஈரோடு,கரூர் மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால் முதியவர்கள், குழந்தைகள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக ஏப்ரல், மே எனக் கோடைக் காலத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி மாதமே பல இடங்களில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. மாசி மாதம் மச்செல்லாம் குளிரும் என்று கிராமங்களில் சொல்வார்கள். மகா சிவராத்திரி வரைக்குமே பனி காலம்தான் இருக்கும். இப்போது கால நிலை மாற்றத்தினால் பங்குனி, சித்திரை போல மாசி மாதத்தில் வெயில் பட்டையை கிளப்புகிறது.

கடந்த சில நாட்களாகவே ஈரோடு நகரத்தில் அதிக பட்ச வெப்பநிலையாக 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம், ஈரோடு கன்னியாகுமரி, கரூர் மாவட்டங்களில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளைய தினம் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப்ரவரி 23ஆம் தேதி வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் சென்னையில் பகல் நேரங்களிலும் சுள்ளென்ற வெயிலோடு கூடவே ஜில்லென்ற காற்றும் வீசுகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மாசி மகம் நாளான பிப்ரவரி 24 மற்றும் பிப்ரவரி 25ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குளுமையான அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.