அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
அஜித் நடிப்பில் கடைசியாக ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி இருந்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகாததால் ‘விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் காத்திருந்து வருகின்றனர்.
இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் திடீர் சர்ப்ரைஸாக இன்று இரவு விடாமுயற்சி டீசர் வெளியிடப்படும் என இன்று தகவல் பரவியது. 10 மணிக்கு மேல் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் இதனை உறுதி செய்தார்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. சன் டிவி-யின் யூடியூப் பக்கத்தில் விடாமுயற்சி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில், விடாமுயற்சி திரைப்படம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, பொங்கல் திருவிழா ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது விடாமுயற்சி.
Pingback: அஜித் ரசிகர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் கொடுத்த டபுள் ட்ரீட் | சினிமா Latest News Stories from Thiruvarur