பனை மரத்தின் சிறிய வரலாறு:
பனைமரம் 108 நாடுகளில் வளர்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 30 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்பொழுது வெகுவாக அளிக்கப்பட்டு வருகிறது. பனையை பருவப்பனை(பெண்பனை) மற்றும் அழகுப்பனை(ஆண்பனை)என்று கூறலாம். பனை 10 ஆண்டுகளுக்கு பின்னரே 15m வளரும். வளர்ந்த பின்னரே ஆண்பனை, பெண்பனை வேறுபடுத்த முடியும். பனைமரம் சுமார் 30m நீளம் வளரும். இதன் இலைகள் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் நீளமாக இருக்கும். பனை மரம் தண்ணீர் இல்லாமலே பழம் தருகிறது. பனைமரத்தின் பயன்களை ரசிக்கலாம் வாருங்கள்!
பனை ஓலை:
பனைமரம் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதில் இருந்து கிடைக்கும் பயன்கள் ஏராளம். அதில் ஒன்று பனை ஓலை. பனை ஓலையில் அழகிய கைவினை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள், பனை விசிறி, பனை ஓலையை வைத்து கலைப்பொருள்கள் செய்து சிலர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆகவே, பனைமரம் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.
பனங்கற்கண்டு:
பனைமரத்திலிருந்து நுங்கு, கள், பனங்கிழங்கு கிடைக்கிறது. பனைவெல்லத்தில் இருந்து கிடைக்கும் “பனங்கற்கண்டு” இனிப்பு சுவையை கொண்டது. பனங்கற்கண்டை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம். வாய்துர்நாற்றம், உடல்சத்து, தொண்டைக்கட்டு, ஞாபகசக்தி, நோய் எதிர்ப்பு, உடல் வெப்பத்தை சமமாக்குதல் போன்ற பல பயன்களை கொடுக்கிறது. கர்ப்பிணிபெண்கள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கருப்பட்டி வெல்லம்:
டீ, காப்பி பிரியர்கள் இந்த உலகில் ஏராளம். அதில் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் கருப்பட்டி வெல்லம் உபயோகிக்கலாம். அப்படி அருந்தி வருவதால் நன்மைகள் பல. பனை வெல்லத்தில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்கிறது. பனைவெல்லத்தில் வெள்ளை சர்க்கரையை விட 60 மடங்கு கனிமங்கள் இருக்கிறது.
மலசிக்கல், உடல் எடை குறைப்பு, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றுதலுக்கு உதவும். மற்றும் குடல், உணவுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றை சுத்தம் செய்ய உறுதுணையாய் உள்ளது.
பனங்கிழங்கு:
பனங்கிழங்கு மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. இதை வேகவைத்து துண்டுகளாக்கி சாப்பிடலாம். பனங்கிழங்கு சாப்பிடும் முறை பற்றி பார்க்கலாம்.வேகவைத்து அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் இரும்பு சத்து கூடும். பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலம் பெரும். பெண்களுக்கு கர்பப்பை வலுவடையும்.
இது வாயு தொல்லை உடையது. எனவே பனங்கிழங்குடன் உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டு வரலாம். இனிப்பு பிரியர்கள் கருப்பட்டி சேர்க்கலாம்.
பனங்கிழங்கு நார் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒற்றை தலை வலி உள்ளவர்கள் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.
நுங்கு:
பனை மரத்தில் இருந்து குறிப்பிட்ட பருவ காலத்தில் நுங்கு விளைகிறது. குறிப்பாகக் கோடை காலங்களில் நுங்கு அதிகளவில் விளையும். ஒரு நுங்கு காயில் மூன்று கண் நுங்குகள் இருக்கும். இந்த நுங்குகள் உடலுக்குக் குளிர்ச்சியை தந்து, நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கோடை காலத்தில் நுங்கும், பதநீரும் அதிகளவில் விற்பனைக்கு வரும். அப்போது பச்சை பனை ஓலைகளை பட்டையாக கட்டி அதில் இளம் நுங்குகளை கீறி போட்டு, பதநீர் ஒற்றி குடித்தால் அந்தச் சுவைக்கு ஈடு இணையே இருக்காது. பச்சை பனை ஓலை வாசனையுடன் பதநீரை குடிப்பது உடலுக்கு ஒரு வித புத்துணர்ச்சியை தரும்.
பனம்பழம்:
பனைமரத்தில் காய்க்கும் நுங்கு காய்கள் பழுத்துவிட்டால் பனம் பழம் கிடைக்கும். இந்தப் பனம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது. இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் உடலிற்கு ஆரோக்கியத்தை தருகிறது. பனம் பழம் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே விற்பனைக்கு வரும். நகர வாசிகளுக்குப் பனம் பழம் என்றால் என்னவென்றே பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பனம் பழம் கிராமங்களில் மட்டுமே கிடைக்கும். அதிலும் குறிப்பிட்ட சில பருவ காலங்களில் மட்டுமே இந்தப் பனம் பழங்கள் விற்பனைக்கு வரும். குற்றாலம் மலைப்பகுதிகளில் சீசனுக்கு செல்லும் போது, இந்தப் பனம் பழங்கள் அதிக அளவில் விற்பனையாவதை நாம் காணலாம். இந்தப் பழம் உள்ளுக்குள் சாறு கலந்த நார்களுடன் கூடிய சதை அமைப்பில் இருக்கும். நன்கு பழுத்த பழங்களில் இருந்து அதனை வெட்டும் போது வரும் வாசனையே நமக்குள் ஒரு வித புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதை நாம் உணர முடியும். இதில் பல சத்துக்கள் நிரம்பி உள்ளதால் கிராமங்களில் பனம் பழம் பத்தும் செய்யும் என்ற சொலவடை பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.
பனைமரம் எங்கு உள்ளது?
தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேல் பனை மரங்கள் உள்ளது. அதில் 50 சதவீதம் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் சென்னை, நாமக்கல், சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 20 சதவிகித பனை மரங்களும் உள்ளன.
பனைத்தொழில்:
பனைமரம் ஆரோக்கியதிக்கு மட்டுமில்லாமல் பலரின் வாழ்வாதாரமாக இருக்கிறது. பனைமரத்திலிருந்து வரும் பனைஓலைகளை வைத்து கலைப்பொருள்கள், நார் பெட்டி, ஓலை பெட்டி, சிலம்பு கம்பம், கல்யாண பாய்கள், இடியாப்பம் தட்டு, வித விதமான கூடைகள், விசிறி, தொப்பி ஆகிய பொருள்களை சில மக்கள் கைத்தொழிலாக செய்து வருகின்றனர்.
நம் முன்னோர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன் அளித்து பழமை நிறைந்த பாரம்பரியம் மிக்க அனைவராலும் மறக்கப்பட்ட பனைமரத்தின் பெருமையை அனைவர்க்கும் பகிர்வோம்.
Pingback: சூது கவ்வும் 2 திரைவிமர்சனம் | சினிமா, திரை விமர்சனம் Latest News Stories from Thiruvarur