மத்திய பட்ஜெட்டில் வருமான வரியை அடுத்து நடுத்தர மக்கள் அனைவரும் கவனம் செலுத்துவது பெட்ரோல், டீசல் விலை.. நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் அது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, எப்போதாவது பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பெரும்பாலும் விலை அதிகரிக்கப்பட்டே வந்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே மாதந்தோறும் நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டது. முதலில் மாதத்திற்கு இருமுறை மாற்றியமைக்கப்பட்ட விலை, 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் அவைகள் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரிகளே. சுங்க வரி உள்பட மத்திய அரசின் வரியாக 21 சதவிகிதமும், மாநில அரசின் வாட் வரியாக 16 சதவிகிதமும் வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 50 டாலர் வரை குறைந்த நிலையில், சுங்க வரி உயர்வு மூலம் அந்த லாபத்தை மத்திய அரசு தனதாக்கி கொண்டது.
இந்த விலை உயர்வு 2021 ஆம் ஆண்டு திரும்பப்பெறப்பட்டது. எனினும் பெட்ரோல் டீசல் விலை போதிய அளவில் குறையவில்லை. இச்சூழ்நிலையில் 2022 ஆம் ஆண்டு மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு. பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. மத்திய அரசை பின்பற்றி சில மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்ததால் மேலும் விலை குறைந்தன.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ் நிதியாண்டின் முதல் இரு காலாண்டு காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் ஈட்டியுள்ளன. அதற்கு காரணம் தற்போது கச்சாய் எண்ணெய் பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருப்பதே. மக்களவை தேர்தல் வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை சற்றே குறைத்து, அது மக்களுக்கு சலுகையாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் மக்களின் செலவழிக்கும் சக்தி அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்பது நிபுணர்களின் கருத்து. டீசல் விலை குறையும்பட்சத்தில் மாநில அரசுகளும் தாங்கள் இயக்கும் பேருந்துகளின் கட்டணங்களை குறைக்க முன்வரலாம். அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவால் மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையான நிதி இழப்பு ஏற்படும்.
லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்தால் மத்திய அரசுக்கு 12,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் சுங்க வரியின் அடிப்படையிலே மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலுக்கு வாட் வரி விதிப்பதால், மாநிலங்களும் கடுமையான இழப்பை சந்திக்கும். 619 நாள்களாக பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றமோ இறக்கமோ இல்லை. இந்த நிலையே தொடருமா? அல்லது விலை மேலும் குறையுமா என்பது சாமன்ய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது, பெட்ரோல், டீசலைப் போன்றே மக்களை நேரடியாக பாதிப்பது சமையல் எரிவாயு விலை.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களுக்கு முன்னதாக கேஸ் விலை ஆயிரத்து 100 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வீட்டு உபயோக கேஸ் விலையை மத்திய அரசு 200 ரூபாய் குறைத்தது. அதேபோல உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் 200 ரூபாய் மானியமாக வழங்கியது. இந்த நிலையில் பட்ஜெட்டில் கேஸ் விலை குறைக்கப்படாது என்றே கூறப்படுகிறது.