தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ரிட் பயணித்த போது விமானத்தில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடத்தப்படும் விம்பிள்டன் தொடரின் தீவிர ரசிகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விம்பிள்டன் தொடரை குடும்பத்தினருடன் சென்று நேரில் கண்டு ரசித்தார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் காலிறுதி போட்டிகளை இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து பார்த்தார்.
இதன் மூலமாக கிரிக்கெட்டை கடந்து டென்னிஸ் விளையாட்டிலும் மு.க.ஸ்டாலினுக்கு ஆர்வம் இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட மு.க.ஸ்டாலின், துபாய் வழியாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரை சென்றடைந்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தொழில்துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட பலரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்தில் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சும் பயணித்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் விமானத்திலேயே சந்தித்துள்ளனர். அப்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை மு.க.ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆகாயத்தில் ஆச்சரியம்.. டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை விமானத்தில் சந்தித்தேன் என்று பதிவிட்டுள்ளார். அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
சின்னருடன் மோதிய அரையிறுதி போட்டியில் 6-1, 6-2, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பின் நாடு திரும்பிய ஜோகோவிச் விமானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். ஜோகோவிச்சை சந்தித்த மகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் ரசிகரை போல் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.