இந்தியாவில் அண்மைக்காலமாக பங்குச்சந்தை சார்ந்த மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒரு 45 வயது நபர் பங்குச்சந்தை மோசடியில் சிக்கி நான்கு கோடி ரூபாயை இழந்துள்ளார்.
அந்த நபருக்கு இரண்டரை மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் தாங்கள் ஒரு புகழ்பெற்ற நிதி நிறுவனத்திலிருந்து தகவல் அனுப்புவதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்த்துள்ளனர்.
தினம்தோறும் அந்த வாட்ஸ் அப் குழுவில் பங்குச்சந்தை சார்ந்த விவரங்களை வழங்கியுள்ளனர். மேலும் தாங்கள் கூறும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்திலேயே அதிக லாபம் ஈட்ட முடியும் என அவர்கள் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர் அவர்கள் கூறியபடியே முதலீடும் செய்ய தொடங்கியுள்ளார். அந்த மோசடியாளர்கள் இவருக்கு வாட்ஸ் அப் வாயிலாக “Br-Block Pro” என்ற ஒரு செயலியை அனுப்பி இந்த செயலி தங்களுடைய நிறுவனம் உருவாக்கியது என்றும் இதில் முதலீடு செய்தால் குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் ஈட்டலாம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய செய்துள்ளனர். அவரும் அதனை பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 26 முதல் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் பலமுறை பணத்தை அனுப்பி முதலீடு செய்திருக்கிறார். இவ்வாறு அவர் 4 கோடி ரூபாய் வரை அனுப்பியுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் தன்னுடைய பணத்தை திரும்ப எடுக்க அவர் முயற்சி செய்தபோது அவரால் பணத்தை திரும்ப எடுக்க முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்தியாவில் இது போன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோர் தவிர வேறு எந்த மூலங்களில் இருந்தும் எந்த ஒரு செயலியும் பதிவிறக்கம் செய்யக்கூடாது என அறிவுறுத்துகின்றனர். மேலும் நிதி சார்ந்த எந்த ஒரு தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற மோசடியான வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து மக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அண்மைக்காலமாக இதுபோல முதலீடு சார்ந்த மோசடிகள் அதிகரித்திருப்பதால் எந்த ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும் என கூறுகின்றனர்.