மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணி, பெர்த் மைதானத்தில் நேற்று கடைசிப் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில், 299 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 215 ரங்களுக்கு ஆல் அவுட் ஆகி 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் அருந்ததி ரெட்டியும் (4 விக்கெட்டுகள்), பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனாவும் (105 ரன்கள்) மட்டுமே இப்போட்டியில் சிறப்பாக விளையாடினர்.
இந்தத் தோல்வியின் மூலம் ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தாலும், ஸ்மிருதி மந்தனாவின் சதம் சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது. காரணம், இந்த ஆண்டில் ஸ்மிருதி மந்தனாவின் நான்காவது ஒருநாள் சதம். கடந்த ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 சதங்களையும், அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிராக 1 சதத்தையும் ஸ்மிருதி மந்தனா அடித்திருக்கிறார். இதற்கு முன்னர் ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு வீராங்கனையும் ஒரே ஆண்டில் நான்கு சதங்களை அடித்ததில்லை.
அதிகபட்சமாக, நாட் ஸ்கிவர்-பிரண்ட், SFM டிவைன், எல் வோல்வார்ட், சித்ரா அமின், பி.ஜே. கிளார்க், ஏ.இ. சாட்டர்த்வைட், எம்.எம். லானிங், ஜே. கென்னரே ஆகிய ஆறு வீராங்கனைகள் ஒரு ஆண்டில் மூன்று சதங்களை அடித்திருந்தனர். தற்போது, ஸ்மிருதி மந்தனா இந்த சதத்தின் மூலம் ஆறுபேரையும் ஓவர்டேக் செய்து, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஓராண்டில் நான்கு சதங்களை அடித்த முதல் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனாவின் 9-வது சதம் இது. ஏற்கெனவே, ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையில் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜை (7) முந்திய ஸ்மிருதி மந்தனா, ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக சதங்கள் அடித்த மெக் லானிங் (15), சுசி பேட்ஸ் (13), டாமி பியூமன்ட் (10) ஆகியோரையும் இனி வரும் காலங்களில் ஓவர்டேக் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.