kalki-2898
kalki-2898

கல்கி விமர்சனம் கடைசி வரை கல்கியை கண்ணுலயே காட்டலையேப்பா

5/5 (3)

நடிகர்கள்: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் இசை: சந்தோஷ் நாராயணன் இயக்கம்: நாக் அஸ்வின்

மகாபாரதத்தில் தொடங்கி கலியுகம் வரை கல்கி 2898 ஏடி படத்தின் கதை பிரம்மாண்டமாக செல்கிறது. இப்படியொரு பிரம்மாண்டமான கதையை இன்னும் எத்தனை பாகங்களாக படமாக்கி நாக் அஸ்வின் முடிப்பார் என்பதே மிகப்பெரிய கேள்வியாகத்தான் இருக்கிறது. கல்கி படத்தின் முதல் பாதியில் பிரபாஸே கேமியோவாகத்தான் வந்து செல்கிறார்.

கமல்ஹாசன் படத்தின் மெயின் வில்லன் எனக் கூறப்பட்டாலும் தானோஸ் மார்வெல் படங்களில் ஒவ்வொரு சீன் வருவது போல முதல் பாதியில் ஒரு காட்சியிலும், கடைசியில் கிளைமேக்ஸில் ஒரு காட்சியிலும் தான் எட்டிப் பார்க்கிறார். ஆனால், ஒட்டுமொத்த படத்திலேயே கமல்ஹாசன் வரும் காட்சிகள் தான் தியேட்டர் தெறிக்கிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, சோபனா, பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், சிறப்பு கேமியோக்களும் படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் வந்து செல்கின்றனர். பாகுபலி படத்தை விட கல்கி படம் பிரபாஸுக்கு பெரிய படமாக அமைந்துள்ளதா? பில்டப் பண்ண அளவுக்கு கல்கி வொர்த்தா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் காணலாம் வாங்க..

கல்கி கதை

கலியுகத்தில் கலியை அழிக்க நான் அவதாரமெடுப்பேன். என்னை காப்பாற்றும் போது உன் சாபம் தீரும் என அஸ்வத்தாமாவுக்கு அவரது சிரோன்மணியை பிடுங்கி விட்டு சாபம் கொடுத்த பின்னர் கிருஷ்ணர் சொல்கிறார். குருக்‌ஷேத்ர போருக்குப் பிறகு புது யுகமாக கலியுகம் தொடங்குகிறது. உலக போர்கள் நடந்து உலகம் மொத்தமும் அழிகிறது. முதல் நகரமான காசி கடைசி நகரமாக மாறுகிறது. பைரவா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகன் பிரபாஸ் காம்ப்ளக்ஸ் எனும் இடத்திற்கு சென்றால் தான் நல்ல காற்றை சுவாசித்து, சந்தோஷமாக வாழ முடியும் என யூனிட்ஸ்களை சேகரிக்க பல திருட்டு வேலைகளையும், பிடித்துக் கொடுக்கும் வேலைகளையும் செய்து வருகிறார். கல்கியை வயிற்றில் சுமக்கும் சுமதியை (தீபிகா படுகோன்) பிடித்துக் கொடுத்தால் பெரிய தொகை கிடைக்கும் என அவரை பிடித்துக் கொடுக்க முயற்சிக்க, அஸ்வத்தாம்மா சுமதியை காக்க சண்டை போடுகிறார். ஷியாம்பாலா எனும் ரகசிய இடத்தையும் பைரவா சுப்ரீம் யஷ்கினின் (கமல்ஹாசன்) ஆட்களுக்கு காட்டிக் கொடுக்க இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த கல்கி 2898 ஏடி படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு

பிரம்மாண்டத்தின் உச்சமாகவே கல்கி திரைப்படம் உள்ளது. மிகப்பெரிய புராணக் கதையை உருவாக்க நாக் அஸ்வின் போராடி இருக்கிறார். கதைக்களத்தை செட் செய்ய அவருக்கு முதல் பாதி முழுவதும் தேவைப்படுகிறது. இரண்டாம் பாதி முழுக்கவே படம் சூடு பிடிக்கிறது. பிரபாஸுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. 2ம் பாதி மற்றும் கிளைமேக்ஸ் காட்சியில் பிரபாஸ் யார் என்று காட்டப்படும் இடங்கள் தான் ரியல் கூஸ்பம்ப்ஸ்.

படத்தின் பிளஸ்

நாக் அஸ்வினின் மேக்கிங் பிரம்மிக்க வைக்கிறது. ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை இந்தியாவிலும் கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார். 3டி தொழில்நுட்பத்திலும் படம் மிரட்டுகிறது. சிஜி காட்சிகள் பெரிதாக எங்கேயும் சொதப்பவில்லை. ஆரம்பத்தில் பிரபாஸ் சண்டையிடும் காட்சிகளில் ஒரு சில இடங்களில் சிஜி சொதப்பல்கள் லேசாக உள்ளன. தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சனுக்கான படமாகவே இந்த கல்கி படம் உருவாகி இருக்கிறது. சந்தோஷ் நாராயணின் இசை தான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறது. ஏகப்பட்ட கேமியோக்கள் படத்தில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றன. மகாபாரதத்தில் இடம்பெற்ற குருக்‌ஷேத்ரா போர் காட்சியை காட்டும் இடங்களும் அடுத்த பாகத்துக்கான லீடு கொடுக்கும் இடங்களும் அட்டகாசம்.

படத்தின் மைனஸ்

பாகுபலி படத்தை விட பிரம்மாண்ட கதையை நாக் அஸ்வின் எடுத்துக் கொண்டு சொன்னாலும், இந்த படத்தில் ஏகப்பட்ட குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. படத்தில் கேமியோக்களாக வந்தவர்கள் பெரிதாக படத்தில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நட்புக்காகவே வந்து செல்கின்றனர். விஜய் தேவரகொண்டா கேமியோ மட்டுமே ஹைலைட். ஆரம்பத்தில் காமெடி காட்சிகள் என வைப்பது எல்லாம் படத்திற்கு தேவையில்லாத ஆணி. ஒரே ஒரு சீன் வரும் திஷா பதானி அதன் பின்னர் என்ன ஆனார், எங்கே போனார், என்றே தெரியவில்லை. தீபிகா படுகோன் யார்? சுப்ரீம் யாஷ்கின் யார்? கலியை உருவாக்குவது தான் அந்த பிராஜெக்ட் கேவா என ஏகப்பட்ட கேள்விகளை அப்படியே விட்டு விட்டு முதல் பாகத்தை முடித்து விட்டனர்.

மேலும், ஹாலிவுட் படங்களான மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு, சமந்தா நடித்த யசோதா, டூன், ஸ்டார் வார்ஸ் என பல படங்களில் பார்த்த காட்சிகளை அப்படியே வைத்திருப்பது என ஏகப்பட்ட மைனஸ்கள் இருந்தாலும், இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது நிச்சயம் ஒரு மிகப்பெரிய எக்ஸ்பீரியன்ஸாகவே இருக்கும். ஹாலிவுட்டில் ஹாரிபாட்டர் படங்கள், அவெஞ்சர் படங்களை பல பாகங்களாக பார்த்தது போல இந்த படத்தையும் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். கல்கி அவதாரம் எப்போது வரும் கல்கியாக யார் நடிக்கப் போகிறார் என்கிற க்யூரியாசிட்டியை கிளப்ப கிருஷ்ணரின் முகத்தை கூட இந்த பாகத்தில் காட்டவில்லை.

1 Comment

Comments are closed