மறந்துபோன நினைவுகளை பாட்டு பாடி மீண்டும் கொண்டு வருவது, உடம்பெல்லாம் எதையாவது கிறுக்கி வைத்து பழைய ஞாபகத்தைத் தேடுவது, பழைய சம்பவம் ஏதாவது ஒன்றை வைத்து ஹீரோ அல்லது ஹீரோயின் மறந்துபோன நினைவுகளை ‘தூசி தட்டுவது’ என பல விஷயங்ககளை தமிழ் சினிமா காட்சிகளாக வைத்துள்ளது. இதுபோல ஹீரோ மறந்துபோன ‘நினைவுகளை தேடும் முயற்சிதான்’ ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம்.
சினிமாவில் டைரக்டராக வேண்டும் என முயற்சி செய்யும் சித்தார்த், தந்தையின் வற்புறுத்துதலால் ஆஷிகாவை திருமணம் செய்கிறார். இருவரும் மனம் ஒத்து வராமல் குடும்பம் நடத்துகிறார்கள். சாலையில் ஆஷிகா ஒரு கொலையைப் பார்த்து விட, சித்தார்த் காவல் நிலையத்தில் ஆஷிகாவை புகார் அளிக்கச் சொல்கிறார். ஆஷிகா மறுத்து விட, இருவருக்கும் இடையே மோதல் வருகிறது. இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதன் பிறகு சில நாட்கள் சென்ற பிறகு சித்தார்த்துக்கு விபத்து ஒன்று நடக்க, விபத்தில் அவர் தனது சில நினைவுகளை இழந்து விடுகிறார். திருமணம் ஆனதையும் மறந்து விடுகிறது. திருமணமான விஷயத்தை மறைத்து இவரது பெற்றோர்களும், நண்பர்களும் மீண்டும் ஒரு திருமணத்தை சித்தார்த்துக்கு செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக பிரிந்துபோன மனைவியை மீண்டும் சந்திக்கிறார் சித்தார்த். ‘மிஸ்’ ஆன ‘மிஸஸ்’ என்ன செய்தார் என்பதுதான் ‘மிஸ் யூ’ படத்தின் கதை.
‘பொண்டாட்டியை மறக்கறது பெரிய வரம். இது எல்லோருக்கும் கிடைக்காது. உனக்குக் கிடைச்சிருக்கு’ இதுபோன்ற காலாவதியான வசனங்கள் பலவற்றை நகைச்சுவை என்ற பெயரில் டைரக்டர் படத்தில் வைத்திருக்கிறார். அது என்னமோ தெரியல, நண்பர்களோடு உட்கார்ந்து பேச ஹோட்டல், டீ கடை, என பல இடங்கள் நம்ம ஊர்ல இருக்கு. ஆனா, நம்ம ஹீரோக்களும், அவரது சகாக்களும் ஒயின் ஷாப் பாரில் உட்கார்ந்துகிட்டு கவலைப்படுறாங்க, யோசிக்கிறாங்க, திட்டம் போடுறாங்க.
இந்தப் படத்துலயும் ஹீரோவும், நண்பர்களும் தாராளமாக தண்ணி அடிக்கிற சீன்ஸ் இருக்கு. (நோ கமெண்ட்ஸ்) பால சரவணன், லொள்ளு சபா மாறன் இருவரும் சேர்ந்து ஏதோ பேசுறாங்க. ஆனா, தியேட்டர்ல யாருமே சிரிச்ச மாதிரி தெரியல. படம் பிளாஷ் பேக், நிகழ் காலம் என இரண்டு கட்டங்களில் நகர்கிறது. இரண்டையும் இணைக்கும் எடிட்டிங்கில் கூர்மை இல்லை. பரபரப்பாக திரில்லர் அனுபவத்தைத் தர வேண்டிய இப்படம், சரியான திரைக்கதை இல்லாததால் மிகவும் சுமாராக வந்திருக்கிறது.
இந்தத் திரைக்கதையிலும் படத்தை பார்க்கலாம் என்று எண்ண தோன்றும் ஒரு விஷயம், ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத்தின் நடிப்புதான். அப்பாவுக்கு திருமணம் செய்துகொள்ளும்போதும், கணவனை விட்டுப் பிரிந்த பின்பு கண்களில் ஒருவித சோகத்துடன் இருப்பதும், கிளைமாக்ஸ் காட்சியில் ‘நீங்கதான் மறந்துட்டீங்க, நான் மறக்கல’ என்று சொல்லும்போதும் ஆஷிகா நடிப்பில் ஆஹா சொல்ல வைக்கிறார். அழகும், நடிப்பும் சேர்ந்த ஒருசில ஹீரோயின்கள் வரிசையில் ஆஷிகாவுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கு. கன்னடத்தில் அதிகப் படம் நடிக்கும் ஆஷிகாவை நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தமிழ் திரைப்பட டைரக்டர்கள் முன் வர வேண்டும்.
சித்தார்த் அளவோடு நடித்திருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை காதல் காட்சிகளுக்குக் கை கொடுக்கிறது. காதலும், காதல் தரும் வலியையும் சரியாக ‘மிஸ் யூ’ படம் தந்திருந்தால், ‘இப்படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்’ என்று சொல்லி இருக்கலாம்.