Sookshmadarshini Review
Sookshmadarshini Review

சூக்‌ஷ்ம தர்ஷினி திரை விமர்சனம்

5/5 (12)

சுக்ஷம தர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் என மலையாளத்தில் பொருள். தன் கணவர், குழந்தை என சந்தோஷமான வாழ்க்கையில் இருக்கும் ப்ரியதர்ஷினிக்கு (நஸ்ரியா) வேலையில்லாமல் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பது ஒரு வெறுமையைக் கொடுக்கிறது.

மைக்ரோபயோலஜி படித்திருக்கும் அவர் வேலைக்களுக்காக முயற்சி செய்தும் வருகிறார். வீட்டிலிருக்கும் நேரங்களில் பக்கத்து வீட்டாரிடம் வாட்ஸ் அப்பில் பேசுவதுதான் ப்ரியாவின் வேலை. அதுமட்டுமல்ல, மற்ற பக்கத்து வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளை தெரித்துகொள்ள துடிக்கும் நபராகவும் இருக்கிறார்.

அப்படி ப்ரியாவின் பக்கத்து வீட்டுக்கு மேனுவல் (பேசில் ஜோசப்) தன் தாயாருடன் குடி வருகிறார். அதன் பிறகு ஒரு நாள் மேனுவலின் தாயார் காணாமல் போகிறார். அவர் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மேனுவல் பக்கத்து வீட்டார் அனைவரிடமும் அதன் பின் தெரிவிக்கிறார். இதில் ஏதோ சிக்கல்கள் நிறைந்திருப்பதாக எண்ணும் ப்ரியா `ஷெர்லாக் ஹோல்ம்ஸ்’ லெவலுக்கு நேரடியாக தீவிர தேடலில் இறங்குகிறார். அதன் பிறகு தாயார் கிடைத்தாரா? டார்கெட் வைத்த மெயின் வில்லன் சிக்கினாரா? என்பதை ட்விஸ்ட்களோடு சொல்கிறது `சூக்ஷம தர்ஷினி’.

நான்கு வருடங்களுக்குப் பிறகு மல்லுவுட்டுக்குத் திரும்பி வந்திருக்கும் நஸ்ரியாவுக்கு இத்திரைப்படம் ஒரு ஃபெர்பக்ட் கம்பேக். வேலைக்கு செல்வதற்காக பரிதவிக்கும் மனைவியாகவும், பக்கத்து வீட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்கும் பாத்திரமாகவும் துறுதுறுப்பாக நடித்திருக்கிறார். காமெடி, சீரியஸ் என கதாபாத்திரத்திற்கு தேவையான கச்சிதமான நடிப்பைக் கொடுத்து முத்திரையும் பதிக்கிறார்.

இவரை தாண்டி வில்லனாகவும் காமெடியனாகவும் பட்டாசாய் மிளிர்கிறார் பேசில் ஜோசப். காமெடி டோன்களுக்கு நமக்குப் பரிச்சயமான அவரின் உடல்மொழி இம்முறை கொடூர வில்லனிசத்தையும் காட்டுகிறது. `வகுடு எடுத்து சீவுனா ஹீரோன்னு ( சரத்பாபு) நினைச்சியா, அவன்தான்டா மெயின் வில்லன்’ என ஈவில் ஸ்மைல் கொடுத்து சேட்டைகள் செய்கிறார் சேட்டன் பேசில் ஜோசப். கணவராக தீபக் பரம்போல், பக்கத்து வீட்டுக்காரர்களாக வரும் அகிலா பார்கவன், பூஜா மோகன்ராஜ் எனப் பலரும் கிடைக்கும் கேப்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய கான்சப்ட்டில்தான் படத்தின் அத்தனை முடிச்சுகளும் அவிழ்க்கப்படுகிறது. ஆனால் அதில் அதிரடியான மெனக்கெடல்களை கொடுத்து சரியான சீட் எட்ஜ் த்ரில்லர் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் எம்.சி. ஜித்தின், அதுல் ராமசந்திரன், லிபின். அடுத்தடுத்து இவைதான் நிகழும் என பார்வையாளர்கள் நினைக்கும் சமயங்களில் `இது ட்விஸ்ட் கண்ணா’ என க்ளைமேக்ஸ் வரை துடிப்பாக நகர்த்தி திரையிலேயே ஹீரோவாக ஜொலிக்கிறார் இயக்குநர் எம்.சி. ஜித்தின்.

இதுபோன்ற த்ரில்லர் கதைகளை முழுமையான திரைக்கதையாக மாற்றும்போது எழுத்தாளர்களுக்கு சில சிக்கல்கள் எழும். அதை அனைத்தையும் நியாயம் செய்யும்போது திரைக்கதை தனியாகப் பேசப்படும். அப்படி அனைத்தையும் சரியான முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் த்ரில்லரை கட்டமைக்கும் தொடக்கத்தில் சறுக்கியிருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல் தொடக்கத்தில் சில விஷயங்களை இணைத்து செயற்கைத்தனமாக உணர வைக்கிறார்கள். இதுவே படத்தின் முதல் சில நிமிடங்களுக்கு பாதகமாக அமைந்து வேகத்தையும் குறைக்கிறது. நாம் ஏற்கெனவே பார்த்த கான்சப்ட்டில் படத்தை இணைத்தவர்கள் பிரச்னையை தெளிவாக சொல்லாமல் கடந்தது பிரச்னை.

பெரும்பான்மையான கதை ஒரே தெருவிற்குள் நடப்பதால் ஒளிப்பதிவாளருக்கு பல சவால்கள் இருந்திருக்கும். அதை அத்தனையையும் தாண்டி ஒரு தெருவின் அனைத்து வீட்டிற்குள்ளும் நுழைந்து தெளிவாகப் படம் பிடித்து மிரட்டுகிறது ஷரண் வேலாயுதத்தின் ஒளிப்பதிவு. இன்டர்கட், மேட்ச்கட் என படத்தை இன்னும் பரபரப்பாக்கியிருக்கிறது படத்தொகுப்பு. த்ரில்லர் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோவின் கைவண்ணம் பெரும் பங்காற்றியிருக்கிறது.

அதற்கு பக்கபலமாக கனல் போல நகர்கிறது கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை. இறுதியில் வரும் `மந்தஹாசம்’ பாடல் நஸ்ரியாவின் டிடெக்டிவ் வேலைகளுக்கு மாஸ் கூட்டி அடிப்பொலி ரகமாக வைப் செய்ய வைக்கிறது.

தொடக்கத்தில் சறுக்கல்களை குறைத்திருந்தால் துப்புகளை (டிவிஸ்ட், காமெடி) வைத்து த்ரில்லர் மீட்டரை இன்னும் பெர்ஃபெக்ட்டாக எட்டியிருக்கலாம். ஆனாலும் த்ரில்லராக கவனிக்க வைக்கிறது `சுக்ஷம தர்ஷினி.’