story of justice

நீதிக்கதை விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்

5/5 - (3 votes)

அடர்ந்த வனப் பகுதியில் தனது ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு விட்டு, விட்டு ஒரு மரத்தின் அடியில் காணப்பட்ட நிழலில் உறங்கிக் கொண்டு இருந்தான் ஒரு இடையன்.

அப்பொழுது வானத்தில் ஒரு கழுகு தனது இரையைத் தேடியபடி வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. அந்தக் கழுகு இந்த இடையனின் ஆட்டு மந்தையில் இருந்த ஒரு ஆட்டுக் குட்டியை கண்டது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் விரைந்து வந்து அதனை தூக்கிக் கொண்டு பறந்தது.

இந்தக் காட்சியை வெகு நேரமாக ஒரு காகம் பார்த்துக் கொண்டு இருந்தது. கழுகைப் போலவே செயல்பட்டு தானும் அந்த மந்தையில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளில் ஒன்றை தூக்கி வர வேண்டும் என விருப்பம் கொண்டது. ஆனால், கழுகின் சக்தி என்ன, தனது சக்தி என்ன என்பதை அந்தக் காகம் சிந்திக்க மறந்தது.

இடையனோ நல்ல நித்திரையில் இருந்தான்.

அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி அந்தக் காகம் ஆட்டு மந்தைக்குள் விரைந்து புகுந்தது. ஒரு சிறு ஆட்டுக் குட்டியை தேர்ந்தெடுத்து அதன் மேல் அமர்ந்து தனது நகம் கொண்டு அதனை பலமாகப் பற்ற நினைத்தது. எனினும்,

அந்த ஆடு ஒரு குட்டி ஆடாகவே இருந்தாலுமே கூட, அதன் ரோமம் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் அந்தக் காகத்தால் அந்த ஆட்டை பற்றிக் கொள்ள இயலவில்லை.

பிறகு மிகவும் சிரமப்பட்டு தனது நகங்களை மெல்ல அதன் ரோமங்களுக்குள் விட்டு பற்றிக் கொண்டது. ஆனால், ஆட்டுக் குட்டி மிகவும் கனமாக இருந்ததால் அந்தக் காகத்தால் அதனை தூக்க முடியவில்லை.

அதனால் தப்பித்தால் போதும் என அந்த ஆட்டுக் குட்டியை விட்டு, விட்டுப் பறந்து செல்ல நினைத்தது.

ஆனால், அந்தக் காகத்தின் கால்கள் அந்த ஆட்டுக் குட்டியின் ரோமங்களில் நன்றாக சிக்கிக் கொண்டதால், காகம் தனது கால்களை வெளியே எடுக்க முயற்சி செய்யும் போது அந்த ஆட்டுக் குட்டிக்கு வலி எடுத்தது.

அதனால் அந்த ஆட்டுக் குட்டி கத்தியது. காகமும் தப்பிக்க முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டு கரைந்தது. இதனால் அந்த ஆட்டு மந்தைகளில் இருந்த அனைத்து ஆடுகளும் நடப்பது அறியாது பயம் கொண்டு கனைத்தது. இதனால் அந்த இடமே பேர் இரைச்சல் அடைந்தது.

இடையன் இந்தப் பேர் இரைச்சலைக் கேட்டு, “தனது ஆடுகளுக்கு என்ன நேர்ந்ததோ!” என்று பயந்து கண் விழித்துக் கொண்டான். பிறகு அவன் நடந்ததை அறியாது சுற்றி, சுற்றி என்ன ஏது என்று பார்த்தான்.

உடனே தனது ஆட்டை நகங்களால் காயப்படுத்திக் கொண்டு இருந்த அந்தக் காகத்தை கண்டான். அத்துடன் அவ்விடம் நோக்கி விரைந்து ஓடி வந்தான். பிறகு தனது தடியால் அந்தக் காகத்தை அடித்தே கொன்றான்.

பாவம் அந்தக் காகம் தனது சக்திக்கு மீறிய செயலைச் செய்யப் போய் பரிதாபமாகத் தனது உயிரை விட்டது.

நீதி: எப்போதுமே விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.

Related Post