திருவாரூர்: உலக புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்க தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் நகரில் குவிந்துள்ளனர்.
திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று இரவு 10.45 மணியளவில் தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். இன்று அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதன்பிறகு ஆழித் தேரோட்டம் காலை 8:50 மணிக்கு தொடங்கியது.
ஆழித் தேரோட்டம்
தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தரக்ள் திருவாரூரில் திரண்டனர். ஆரூரா.. தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. ஆழித்தேரை தொடர்ந்து, அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட இருக்கிறது.
விழாக்கோலம் பூண்ட திருவாரூர்
விழாவையொட்டி திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்துகள் அடங்கிய குழு தயாராக தேரை பின் தொடர்ந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, இன்று திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவாரூர் நகருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஆழித்தேர். இந்த தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்டது. இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் இந்த தேரில் உள்ளன. இந்த வசதியை திருச்சி பெல் நிறுவனம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேரின் எடை 220 டன் ஆகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடை கொண்ட துணிகள் மூலம் தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3-லும் சிறந்து விளங்குகிறது.
Comments are closed