Damaged Currency Notes

கிழிந்த சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது

5/5 - (2 votes)

டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில், வளர்ந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும், பண நோட்டுகள் வழங்கி பொருள் வாங்கும், முறை மாற்றமடையவில்லை. அவ்வாறு செலுத்தப்படும் பணம், சேதமடைந்திருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளப் பலரும் மறுப்பர். ஒருவேளை உங்களிடம் அப்படி ஒரு பணம் இருந்தால் அதை எப்படி மாற்றிக் கொள்வது, முழு தொகையும் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறதா?.. என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பணம் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?

ரிசர்வ் வங்கிதான் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில், பணத்தை நிர்வாகம் செய்கிறது. அதேபோல ஒரு பணத்தை வடிவமைப்பதில், அரசின் ஆலோசனை பெற்றுத்தான் செயல்படும். வரிசை எண்களின் (serial number) அடிப்படையில் ஆர்.பி.ஐ எவ்வளவு பணம் வேண்டும் என்பதை அச்சகங்களிடம் கோரும். அவற்றை 5 லாக்கர்களில் ஆர்.பி.ஐ பாதுகாத்து வைத்திருக்கும். பரிசோதித்தபின், வங்கிகள் மூலம் ஆர்.பி.ஐ புழக்கத்திற்குக் கொண்டுவரும்.

அதேபோல, வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், பரிசோதிக்கப்பட்டு அது நல்ல நிலையிலிருந்தால் மீண்டும் வங்கிகள் மூலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தால், அவற்றைத் தூள் தூளாக்கப்பட்டு அழிக்கப்படும்.

ரூபாய் உருவாக்குவதில் இந்திய அரசின் பங்கு என்ன?

நாணயச் சட்டம் 1906-ன் படி, காலத்திற்குக் காலம் திருத்தங்கள் அடிப்படையில் நாணயங்கள் உருவாக்கும் பொறுப்பு இந்திய அரசின் பொறுப்பில் உள்ளது. நாணயத்தின் வடிவமைப்பினையும், அதன் இலக்கு மதிப்பினையும் இந்திய அரசு தீர்மானிக்கிறது.

ஆர்.பி.ஐ பணத்தை எப்படி சேமித்து வைக்கிறது?

பணத்தாள்களை நாணயங்களையும், மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் பணத்தை பாதுகாக்கும் லாக்கர்கள் வைத்திருக்கும் அதிகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 4368 லாக்கர்கள் இருப்பதாக ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிறு மதிப்பு நாணயங்கள் பாதுகாக்க நாடுமுழுக்க 3708 மையங்கள் இருப்பதாக ஆர்.பி.ஐ 2002-ம் ஆம் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளது.

சேதமடைந்த பணித்தாளாக ஆர்.பி.ஐ எதைக் கணக்கிடுகிறது?

மடங்கியும், வரிசை எண்கள் மங்கியும், எரிந்தும் காணப்படுவது சேதமடைந்த பணத்தாளாக கருதப்படுகிறது. பணத்தாள் இரண்டு துண்டுகளாகி, வரிசை எண் இரண்டிலும் சரியாக இருந்தால் அதை சேதமடைந்த பணமாக ஆர்.பி.ஐ எடுத்துக்கொள்ளும்.

சேதமடைந்த பணத்திற்கு முழு மதிப்புப் பெற அதிகாரம் உள்ளதா?

அரசியல் கோஷங்கள், கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், 2009 விதி எண் 6(3)-ன்படி சட்டப்படி பணமென கருதப்படமாட்டாது. அதற்கான உரிமை தொகையும் வழங்கப்படாது. “நோட்டு திருப்பித் தருதல்” விதிகளின் விதி எண் 6(3) படி திருப்பி அளிக்கவே ஆர்.பி.ஐ பரிந்துரைத்துள்ளது.

ஒரு ரூபாய் நோட் கிழிந்திருந்தாலோ, ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அது சிதைந்த நோட்டாக மட்டுமே கருதப்படும். அவ்வாறு சிதைந்த நோட்டுகள் எந்த வங்கியிலும் வழங்கப்பட்டு மாற்றலாம். ரிசர்வ் வங்கி விதி 2009 படி, அந்த பணத்திற்காக மதிப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

எரிந்து, கருகிப்போன, பிரிக்க முடியாத அளவு ஒட்டிக்கொண்ட பணத்தை எந்த வங்கி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வைத்திருப்பவர், அதை ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்குச் சென்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தலாம். அங்குப் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு காணப்படும்.

அழுக்கடைந்த பணத்தை ஒரு தனிப்பட்ட நபர், ஒரு நாளில் 20 நோட்டுகளை ரூ.5000 வரை மதிப்பு கொண்டதாக இருந்தால் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். 20 நோட்டுகளுக்கு அதிகமாகவோ, ரூ. 5000-க்கும் அதிகமாகவோ வங்கிகள் மாற்ற முன்வந்தால், அதற்கு ஜூலை 01, 2015 தேதியிட்ட DBR. No. Leg. BC.21/09.07.006/2015-16 சுற்றறிக்கையின்படி ரசீது வழங்கி வங்கிக்கணக்கில் வரவு வைக்கலாம். அத்துடன் சேவை கணக்கும் வசூலித்துக் கொள்ளலாம்.

ஒரு தனிநபர் லாக்கர் இல்லாத வங்கி கிளையில் 5 நோட்டுகள் மாற்றுவதற்காக அளித்தால், பகுதி-III, NRR 2009 விதியின் அடிப்படையில் அது மாற்று மதிப்பிலேயே பணம் வழங்கலாம். நோட்டுகளை ரசீதை அளித்துப் பெற்றுக்கொள்ளலாம். அவை தொடர்புடைய லாக்கர் உடைய வங்கிகளுக்கு மதிப்பீடு செய்ய அனுப்பப்படும். அதைச் சரிபார்த்தபின், நோட்டுகளின் மாற்று மதிப்பில், பண மதிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒரு தனிநபர் 5-க்கும் அதிகமான பண நோட்டுகளை, ரூ. 5,000-க்கும் மிகாமலிருந்தால், அவற்றைக் காப்பீட்டு அஞ்சல், வங்கிக் கணக்கு தேவையான கணக்கு எண், கிளையின் பெயர் மற்றும் IFSC விவரங்களுடன் அருகிலுள்ள கருவூல வங்கிக் கிளைக்கு அனுப்பி, மாற்றிக் கொள்ளலாம். கருவூல வங்கிக் கிளைகள் காப்பீட்டு அஞ்சல் மூலம் பெற்ற சிதைந்த நோட்டுகளுக்குரிய மதிப்பீட்டுத் தொகையை, அவற்றைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்பட வேண்டும்.

வங்கிகளில் பெறப்படும் சேதமடைந்த பண நோட்டுகளைச் சரிபார்க்க நோட்டு மாற்றும் விதிகள் 2009-ன் படி, வங்கியில் பொறுப்பு அதிகாரி, வங்கிக்கிளை மேலாளர், கணக்கர் அல்லது பணித்துறையிலுள்ள அதிகாரி ஒருவரை நியமிக்கப்படும். அந்த நோட்டுகள் குறித்த தீர்ப்பினை முடிவு செய்த பின், நியமிக்கப்பட்ட அதிகாரி பெறப்பட்ட தாள் எந்த நிலையில், இருக்கிறது என்ற அடிப்படையில், Pay/Paid/Reject முத்திரையிட்டு தனது கையொப்பத்தை பதிவிட்டு ஆர்.பி.ஐ-க்கு அனுப்புவார்.

பணத்தாள் பேப்பரில்தான் தயாரிக்கப்படுகிறதா?

இந்தியாவில் பேப்பர் போன்ற பணம், 100 சதவீதம் பருத்தியிலிருந்து எடுக்கப்படும் பிசினில் தயாரிக்கப்படுவதாக ஆர்.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.

முதலில் ரூபாய் எப்படி இந்தியாவில் அறிமுகமானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகில் பயன்படுத்தப்படும் நாணயங்களில், இந்தியாவின் பங்கு மிகப்பெரியது. ஆரம்பக் காலத்தில் பண்டமாற்று முறையில் மட்டும்தான் வணிகம் செய்யப்பட்டு வந்த நிலையில், மௌரிய பேரரசர் காலத்தில், வெளியிலான நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இது செப்பு, தங்கம் என்று பல்வேறு வடிவங்களைப் பெற்று பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

டெல்லியில் ஆட்சிபுரிந்த ஷெர்ஷா சூரி கி.பி.1540-ம் ஆண்டில் ‘ரூபியா’ என்ற 11.5 கிராம் எடையிலான வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். ‘வார்க்கப்பட்ட வெள்ளி’ என்பதே, ரூபியாவின் பொருள். அதுவே காலப்போக்கில் ‘ருபி’ ஆக மாறி, ‘ரூபாய்’ ஆகத் தழுவியது. சிப்பாய் காலத்திற்குப் பின்தான் இந்தியாவில் ரூபாய் அதிகாரப்பூர்வமான பணமாக அறிவிக்கப்பட்டது.

1882-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால், முதல் முறையாகக் காகிதப் பணம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 19-ம் நூற்றாண்டில் வெள்ளி நாணயமும் இந்தியாவில் புழக்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியால், 1935ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது. அப்போது, ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டு 5 ரூபாய்த் தாளை ஆர்.பி.ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதுடன், சர்வதேச வளர்ச்சி கண்டது இந்தியப் பொருளாதாரம்.

1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றபின், அமெரிக்க டாலரின் மதிப்பு இந்தியாவில் ஒரு ரூபாய் என இருந்தது. விடுதலைக்கு பிந்தைய காலகட்டத்தில், இந்திய ரூபாய் 16 அணாக்களாக பிரிக்கப்பட்டு ஒரு அணாவின் மதிப்பு 4 பைசாக்களாகக் கணக்கிடப்பட்டது. பின்பு, 1957ம் ஆண்டு 100 பைசாக்கள் ஒரு ரூபாய் என, பண மதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

1960களில் ஏற்பட்ட பண வீக்கம்

இந்தியாவை நாணயங்கள் அச்சிடுவதில் சில சிக்கலை ஏற்படுத்தியது. எனவே அப்போது அலுமினியத்தில் அச்சிடத் துவங்கினர். . 1970களில் எஃகால் ஆன 10 முதல் 50 பைசா வரையிலான நாணயங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. 1954 முதல் 1978-ம் ஆண்டுவரைக்கும் இந்தியாவில் 5,000 மற்றும் 10,000 ரூபாய்த் தாள்களும் புழக்கத்தில் இருந்தன. அவை, பணவீக்கம் காரணமாக ஆர்.பி.ஐ.-ஆல் தடை செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் பணத்தில் 4 தலை கொண்ட சிங்கம் பொறிக்கப்பட்ட நிலையில், 1996-ம் ஆண்டு முதல் காந்தியில் படம் பொறிக்கப்பட்டு வருகிறது. தற்போது பைசாக்கள் திரும்பப்பெறப்பட்ட நிலையில், ரூபாய்கள் மட்டும் புழக்கத்தில் உள்ளது. அதுவும், 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, 500 மற்றும் 1000 ரூபாய் இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு, 500 ரூபாய் மற்றும் 2000 தாள்கள் மீண்டும் வெளியிடப்பட்டன. தற்போது இந்த தாள்கள் புழக்கத்தில் உள்ளன.

Related Post