தமிழ் புத்தாண்டு 2024 : சித்திரை திருநாள் சிறப்புகள்

5/5 - (2 votes)

தமிழ் மாதங்களில் சித்திரை மாத பிறப்பு அல்லது சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். சித்திரை மாதம் இறைவனுக்குரிய மாதங்களில் ஒன்றாக கருதப்படுவதால் இந்த நாளில் வரும் முக்கிய நாட்களில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். அதிலும் சித்திரை முதல் நாளில் செய்யப்படும் வழிபாடுகள் முழுமையான பலன்களை தரக் கூடியவை என சொல்லப்படுகிறது. சித்திரை முதல் நாளன்று பஞ்சாங்கம் படிப்பது மிகவும் விசேஷமான வழிபாடு ஆகும்.

சித்திரை திருநாள், வசந்த காலத்தின் ஆரம்பமாக கருதப்படுவதால் இந்த நாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். சித்திரை மாத பிறப்பு தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளாகவும், கேரளாவில் சித்திரை விஷூவாகவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஜோதிட ரீதியாக மட்டுமின்றி, ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக சித்திரை திருநாள் கருதப்படுகிறது.

நவகிரகங்களில் தலைமை கிரகமாக விளங்கும் சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை மாதப்பிறப்பு என்கிறோம். அப்படி மேஷம் முதல் மீனம் வரை தன்னுடைய ஒரு சுற்று பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் மேஷத்தில் தனது புதிய பயணத்தை சூரிய பகவான் துவங்கும் நாளையே நாம் தமிழ் புத்தாண்டாட கொண்டாடுகிறோம். 60 ஆண்டுகள் கொண்டு தமிழ் ஆண்டுகளில் தற்போது நடைபெற்று வரும் சோபகிருது ஆண்டு, வரும் ஏப்ரல் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் 14ம் தேதி குரோதி எனப்படும் புதிய ஆண்டு பிறக்கிறது.

ஏப்ரல் 14ம் தேதியன்று சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழைய உள்ளார். ஏற்கனவே மங்களகாரகனான குரு பகவான், மேஷ ராசியில் தான் இருக்கிறார். குருவுடன் சூரியன் சென்று சேர உள்ளதால் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது போன்ற சூரிய- குரு சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும் என ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு கூடுதல் விசேஷமாக சூரியனுக்குரிய நாளான ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அது மட்டுமல்ல முருகப் பெருமானுக்குரிய சஷ்டி திதியும், பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும் இணைந்து வரும் மிக அற்புதமான நாளில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.

குரு பகவானும், சூரிய பகவானும் இணையும் நாளில் குரோதி ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு தடைகள் நீங்கி, திருமணம் போன்ற சுப காரியங்கள் அதிகம் நடக்கும் என சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த குரோதி ஆண்டில் குழந்தைப்பேறு அமையும் என்றும், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இந்த ஆண்டு நோய் தீர்ப்பதாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது. குரு, சூரியன் பலமாக இருப்பதால் இந்த இரண்டு கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்றும் ஜோதிட பொதுப்பலன்கள் சொல்கின்றன.

ஏப்ரல் 13ம் தேதி மாலை 05.01 மணிக்கே சஷ்டி திதி துவங்கி விடுகிறது. ஏப்ரல் 14ம் தேதி மாலை 04.47 வரை வளர்பிறை சஷ்டி உள்ளது. அதனால் ஏப்ரல் 14ம் தேதி முருக வழிபாட்டினையும் தமிழ் புத்தாண்டு வழிபாட்டினையும் சேர்த்தே செய்வது சிறப்பானது. ஏப்ரல் 13ம் தேதி இரவே வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளுடன் நம்மால் முடிந்த பிற பழ வகைகள், தானிய வகைகள், நகைகள், பணம் ஆகியவற்றை வைத்து, அதற்கு அருகில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றையும் வைத்து விட வேண்டும். ஏப்ரல் 14ம் தேதியன்று காலையில் எழுந்ததும் பூஜை அறையில் வைத்துள்ள பழங்கள், தானியம், நகை, பணம் ஆகியவற்றை பார்த்து, தொட்டு வணங்கி விட்டு, கண்ணாடியில் நம்முடைய முகத்தை பார்க்க வேண்டும்.

ஏப்ரல் 14ம் தேதியன்று காலை 07.30 முதல் 08.30 வரையிலான நேரம் சித்திரை திருநாள் வழிபாட்டினை செய்வதற்கு ஏற்ற நேரமாகும். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, சூரிய பகவானையும், குல தெய்வத்தை, மகாலட்சுமி ஆகியோரை வழிபட்டு, இந்த ஆண்டு செல்வ செழிப்பானதாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் இனிப்பு, புளிப்பு உள்ளிட்ட அறுசுவைகள் அடங்கிய உணவு சமைத்து, இறைவனுக்கு படைத்து, நாமும் சாப்பிட வேண்டும். புதிய ஆண்டில் வரும் பல வகையான உணர்வுகளையும் சமமாக எதிர்கொண்டு, ஆரோக்கியத்துடன், பலத்துடன் அனைத்தையும் சமாளித்து, மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக வாழ வேண்டும் என்பதை குறிப்பதற்காக இந்த அறுசுவை சமைக்கும் வழக்கம் உள்ளது.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...