புகழ்பெற்ற திருவாஞ்சியம் திருத்தலத்திலிருந்து குடவாசல் செல்லும் வழியில் திருவிடைச்சேரிக்கு அடுத்த ஊர் வடவேர் கிராமம்.
பாலத்தை ஒட்டி ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த கட்டத்தில் சாவித்திரி அம்மாள் கடை உள்ளது. தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த கடைக்கு சாப்பிடச்செல்வோம் என்று எங்களை அழைத்துச்சென்றவர் நன்னிலம் காவல் நிலையத்தில் சிறப்புகாவல் உதவி ஆய்வாளர் ஐயா ஆர். சிலம்புச்செல்வன் அவர்கள்தான்.
கலப்படமில்லாத சிவப்பு மிளகாயுடன் சேர்த்து அரைத்த தேங்காய்சட்னி, தரமான காய்கறிகளுடன் சாம்பார், இட்லிபொடியுடன் இட்லி பரிமாறுகிறார். முதலில் சுடாக மூன்று இட்லிதான் வைக்கிறார். அதன் சுவையில் மயங்கினாலும் அடுத்து இரண்டு இட்லிதான் சாப்பிடலாம் அந்த அளவிற்கு மெதுமெதுவான மிகப்பெரிய அளவிலான இட்லிகளாக வைக்கிறார். தேர்தலில் பறக்கும்படையில் பணிபுரியும் எங்களுக்கு கடந்த நான்கு நாள்களாக அவர்கடையில்தான் காலை உணவு. ஐவருக்கம் சேர்ந்து நூற்று முப்பது ரூபாய்க்கும் மேல் ஆனதில்லை. இட்லி விலை ஐந்து ரூபாய்தான். இதே இட்லி சரவணபவனில் இருபது ரூபாய்.
கடைக்கு வந்து உட்கார்ந்து சாப்பிடுபவர்களைவிட பார்சலில் வாங்கிச்செல்பவர்கள்தான் அதிகம். ஒற்றை ஆளாய் இட்லி ஊற்றும் மாஸ்டராய், சப்ளையராய், பார்சல் கட்டுபவராய் கடைக்கு கிளீனரும் அவரே.சலியாத உழைப்பைத் தருகிறார்.
இன்றுதான் சாவித்திரி பாட்டியிடம் விசாரித்தேன். இரண்டு மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து உதவி செய்தாலும் உழைத்து சாப்பிடவேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணம் பாராட்டுக்குரியது.
இட்லி இனியவன், முருகன் இட்லிகடைக்கு நிகராய் சுவையுடன் விலை மலிவான விலையில் வழங்கும் உழைப்பாளி சாவித்திரி பாட்டிக்கு ஒரு ராயல் சல்யூட்.
செய்யும் தொழிலை தெய்வமாக கருதும் அவரிடம் பாடம் கற்றுக்கொள்வோம்.