அசோகர், அக்பர், ராஜராஜ சோழன் எனப் பல இந்திய மன்னர்கள் தங்களது ஆட்சி முறைக்காகவும் வீரத்திற்காகவும், வள்ளல் தன்மைக்காகவும், ஆடம்பர வாழ்க்கைமுறைக்காகவும் உலகம் முழுவதும் இன்றும் பாராட்டப்படுகிறார்கள். மன்னர்கள் அணியும் உடைகளும், அவர்கள் வாழும் மாளிகைகளையும், அவர்களது சொகுசு நிறைந்த வாழ்க்கையும் சாதாரண மனிதன் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதவை.
வேட்டைக்குச் செல்வதை தவிர்த்து மன்னர்கள் சாதாரண நாட்களில் நகர்வலம் வர வேண்டுமென்றால், அவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தேர் போன்ற ரதத்தில்தான் வெளியே வருவார்கள். இந்த தேர்கள் ஒவ்வொரு மன்னரின் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு வடிவங்களிலும் இருக்கும். சில மன்னர்கள் போருக்குச் செல்லும் போது கூட இதுபோன்ற தேர்களில்தான் செல்வார்கள் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
இன்று நம் வட இந்தியாவின் பிரபலமான ஒரு மன்னரைப் பற்றியே பார்க்கப் போகிறோம். ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியை ஆண்டு வந்தவர் மகாராஜா ஜெய் சிங். இவரது மாளிகையில் எத்தனை விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் இருந்தாலும், அரசருடைய தேரின் அழகிற்கு நிகராக எந்தவொரு பொருளையும் கூற முடியாது. அவ்வளவு நேர்த்தியுடன் இந்த தேர்`வடிவமைக்கப்பட்டிருந்தது.
அரசர் ஜெய் சிங்கின் தேர் அழகில் மட்டுமல்ல, அளவிலும் கணத்திலும் பெரியது மட்டுமின்றி தோற்றத்திலும் கம்பீரமானது. தேவர்களின் தலைவனாக கருதப்படும் இந்திரனின் பெயரில் இந்திர விமானம் என அழைக்கப்பட்டது இந்த தேர். வழக்கமாக தேர்களை குதிரைகளை பூட்டியே இழுத்து வருவார்கள். ஆனால் இந்த தேரை நான்கு யானைகள் சேர்ந்து இழுத்தால் மட்டுமே நகர்த்த முடியும்.
அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவொரு திருவிழா, விசேஷம் என்றாலும் இந்த ரதத்தில்தான் மகாராஜா ஜெய் சிங் பயணம் செய்வார். மூன்று அடுக்குகள் கொண்ட இந்த தேரில் அரசரோடு சேர்த்து அவரது அமைச்சர்கள், சிப்பந்திகள், பாதுகாவலர்கள் அனைவருமே பயணம் செய்வார்கள். தேரில் அரசர் ஊர்வலம் செல்லும் அழகான காட்சியை காண்பதற்காகவே சாலையின் இரு கரைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்திருப்பார்களாம்.
இவ்வுளவு சிறப்புமிக்க இந்த தேர் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்று வரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த கம்பீரமான தேரில் மகாராஜா ஜெய் சிங் பயணம் செய்யும் பல புகைப்படங்கள், ஓவியங்கள் ஆல்வார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.
சுமார் 150 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய கம்பீரமான தேரை ஆல்வாரில் உள்ள ஜகன்நாத் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார் மகாராஜா ஜெய் சிங். இன்றும் கூட ஜகன்நாத் கோவிலின் திருவிழாவின்போது, எம்பெருமான் ஜகன்நாத், ஜானகி தேவியாரை திருமணம் செய்ய இந்த தேரில்தான் பயணிக்கிறார். இதற்காக ஒவ்வொரு வருடமும் சீரமைக்கப்படும் இந்த தேர், மிகுந்த அக்கறையோடு பராமரிக்கப்பட்டு வருகிறது.