Thiruvarur

திருவாரூர் ஆழித்தேர் : வரலாறு மற்றும் முக்கியத்துவம்

5/5 - (2 votes)

திருவாரூர் ஆழித்தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருள, நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி, அசைந்து வரும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என புகழ்ந்து போற்றக் கூடியது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் தேர் தான். இதற்கு ஆழித் தேர் என்று பெயர். திருவாரூர் தேரழகு என்பார்கள். அந்த அளவிற்கு சிறப்பு பெற்ற இந்த தேரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறப்புகளையும், ஆச்சரியங்களையும் கொண்டது.

 ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக தேர் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் உள்ளூர், திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டுமல்ல பல மாநிலங்களில் இருந்தும் வந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருவாரூர் தேர் பற்றி கேள்வி பட்டிருக்கலாம். ஆனால் அந்த தேருக்கு, தேரோட்டத்திற்கும் பின்னால் இருக்கும் பலரும் அறியாத ரகசிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

திருவாரூர் ஆழித்தேர் ரகசியங்களும் சிறப்பும் :

திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்டது. இதன் கலசத்தில் இரண்டு வெள்ளி குடைகள் அமைக்கப்பட்டிருக்கும். தேர் கலசத்தில் வெள்ளி குடை இருப்பதை திருவாரூரை தவிர வேறு எங்கும் காண முடியாது.

ஏழு அடுக்குகளைக் இந்த தேரில் 64 தூண்களும், நான்கு குதிரைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த 64 தூண்களும் 64 கலைகளையும், நான்கு குதிரைகள் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன.

அசுரர்களுடன் நடந்த போரில் இந்திரன் வெற்றி பெறுவதற்கு முசுகுந்த மன்னன் உதவினார். அவருக்கு பரிசாக ஏழு விதமான அதிவிசேஷமான மூர்த்தங்களை வழங்கினான் இந்திரன். இந்த மூர்த்தங்களைக் கொண்டு செல்வதற்காக தேவலோகத்தை சேர்ந்த ஸ்பதியான மயன் என்பவனால் உருவாக்கப்பட்டது தான் ஆழித்தேர்.

பாற்கடலில் உருவான தேவதாருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் போன்ற தேர் என்பதால் இதற்கு ஆழித் தேர் என பெயர் உருவாகிற்று.

திருவாரூர் தேரை ’ஆழித்தேர்’ என ஏன் சொல்கிறோம்?

ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது பொருள். இதனால் கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது. இது அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்க தேர்.

ஆழித் தேரோட்டம் :

இந்த பிரம்மாண்ட தேர் பிரம்ம தேவரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது. திருமால் வணங்கிய இந்த தேரின் குதிரைகளாக அஷ்ட திக் பாலர்கள் மாறியதாகவும், தேர்க்கால் அச்சாக தேர்வர்கள் மாறியவும் தேரின் அடித்தட்டாக கால தேவனே அமர்ந்ததாகவும் இத்தல புராணம் சொல்கிறது.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகிய ஓவியங்கள், சிற்பங்களைக் கொண்ட இந்த தேரால் தான் ரத ஸ்தாபன சாஸ்திரம் என்ற தேர் செய்யும் முறைகள் பற்றி சொல்லும் சாஸ்திரமே உருவானதாக சொல்லப்படுகிறது.

பிரம்மனால் ஸ்தாபனம் செய்யப்பட்ட இந்த தேரில் 7 விதமான மூர்த்தகள், ஈசனை அர்ச்சிக்க 70 வகை சிவ வாத்தியங்கள், 2000 தேவ மலர்கள், ஐந்து வகை புண்ணிய தீர்த்தங்கள் என தேவையான தேவலோக பொருட்களுடன் புறப்பட்ட இந்த ஆழித்தேர் நல்லூர் என்னும் புண்ணிய தலத்தை வந்தடைந்தது.

நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் 7 மூர்த்தங்களும் மூன்று நாட்கள் பூஜை செய்யது வழிபட்ட முசுகுந்த மன்னன், பிறகு சிவ பெருமானின் உத்தரவின் படி திருவாரூக்கு தேர் புறப்பட்டு சென்றது. அங்கு இந்த தேரில் மூல மூர்த்தமான தியாகராஜப் பெருமாள் எழுந்தருள முதன் முறையாக பங்குனி உத்திர நாளில் தேர் பவனி நடைபெற்றது.

திருவாரூர் ரகசியம் :

அப்போது முசுகுந்த மன்னனின் உத்தரவின் பேரில் தேர் பவனி வரும் நான்கு மாட வீதிகளில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பூக்கள் வாரி இறைத்து, இந்த தேவலோக தேரானது வரவேற்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக திருவாரூர் மாட வீதிகள் பொன்பரப்பி திருவீதிகள் என அழைக்கப்படுகின்றன.

ஆழித்தேர் உலா வரும் போது கொடு கொட்டி, பாரி நாயனம் உள்ளிட்ட பல அபூர்வ இசைக் கருவிகள் இசைப்படுவது வழக்கம்.

தியாகராஜ சுவாமியின் திருப்பாதங்களை ஆண்டிற்கு இருமுறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திர திருவிழாவின் போது இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழாவின் போது வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும். இதற்கான காரணம் சரியாக தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

1926 ல் நடந்த தேர்த் திருவிழாவின் போது தேர் முழுவதுமாக எரிந்தது. அதற்கு பிறகு 1930 ல் புதிய தேர் உருவாக்கப்பட்டு 1948 ல் தேரோட்டம் நடத்தப்பட்டது.

தற்போதுள்ள தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 300 டன் எடையும் கொண்ட எண்கோண வடிவத்தில் ஆனது. முற்றிலுமாக அலங்கரிக்கப்பட்ட பிறகு இதன் எடை 400 டன்னாக இருக்கும்.

ஆழித்தேர் சிறப்புக்கள் :

பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த தேரின் நான்காவது அடுக்கில் தியாகராஜர் வீற்றிருப்பார்.

பல டன் மூங்கில்கள், 500 கிலோ வண்ணத்துணிகள், 50 கழிறுகள், 5 டன் பனைமரக் கட்டைகள், இழுப்பதற்கு 4 பெரிய வடங்கள் ஆகியவை இந்த தேரை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்றன. தேரை இழுக்க பயன்படுத்தப்படும் ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. அழகிய சிற்பங்கள், வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேர் அலங்கரிக்கப்படும்.

ஆழித்தேரை வடம் பிடேத்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆழித்தேரில் தியாக சுவாமி ஆடி ஆசைந்து வரும் போது ஆரூரா…தியாகேசா என மக்கள் விண்ணதிர கோஷமிடுவார்கள். பக்தர்களின் கோஷம், கயிலாய வாத்தியங்கள், திருமுறை முழக்கங்கள் ஆகியவற்றை கேட்கும் போது பூலோக கயிலாயமாக திருவாரூர் மாறி இருக்கும்.

ஆழித் தேர் திருவிழாவிற்கு மறுநாள், தேர் அசைந்து சென்ற வீதிகளில் பெண்கள் விழுந்து வணங்கி, தங்களில் வேண்டுதல்களை தியாகராஜ சுவாமியிடம் சொல்லி முறையிடுவார்கள். இந்த நிகழ்ச்சி தேர்த்தடம் பார்த்தல் என்று பெயர். பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டியும், மாங்கல்ய வரம் வேண்டியும் பெண்கள் இதை நேர்த்திக்கடனாக செய்வார்கள்.

Related Post