தமிழ்த்தாய் வாழ்த்து: இந்த பாடல் தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
நீராருங் கடலுடுத்த தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாயை அறிவித்து புகழ்ந்தது
இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும். தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.
ஆங்கிலத்தில் தமிழ் தாய் வாழ்த்துகள்
Tamil Thai Vazhthu in English
Neerarum Kadaludutha
Nilamadandhai Kezhilolugum
Seerarum Vadhanamena
Thihazh Baradha Kandamidhil
Thekkanamum Athil Sirandha
Dravida Nal Thiru Naadum
Thakkasiru Pirai Nudhalum
Thari Thanarum Thilagamume
Athilaga Vasanai Pol
Anaithulagum Inbamura
Yethisayum Pugazh Manakka
Irundha Perum Thamizhanange
Thamizhanange
Un Seerilamai Thiram Viyandhu
Seyal Marandhu Vazhthudhume
Vazhthudhume
Vazhthudhume
வரலாறு தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலைப் பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடிவந்தனர். அதேபோலப் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்சங்கமாக ஏற்று ஆங்காங்கே உருவாக்கப்பட்ட சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது.
1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தமிழ்நாடு அரசின் முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரை தமிழ் மொழியின் வளர்ச்சிப்போக்கை முன்னெடுக்கும் விதமாகத் தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாட ஏதுவாகத் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்தார். ஆலோசனையின் முடிவில் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த பாடலும், கரந்தை கவியரசு இயற்றிய வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது.
இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது.
2021 திசம்பரில் வெளியிட்ட தமிழ்நாடு அரசாணையில் நீராரும் கடலுடுத்த பாடலைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயம் பாடவேண்டும். பாடலைப் பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் (மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு) இப்பாடலை 55 விநாடிகளில் முல்லைப்பாணி எனும் பண்ணில் (மோகனராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.