சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகள் சாதனையை முறியடித்த இளம் வீரர்

5/5 - (2 votes)

19 வயதில் சதம் அடித்ததன் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகள் சாதனையை இளம் வீரர் ஒருவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அவருக்கு முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

1994 – 95 சீசனின்போது சச்சின் டெண்டுல்கர் தனது 22 ஆவது வயதில் சதம் அடித்திருந்தார். ரஞ்சி தொடரில் இளம் வயதில் எடுக்கப்பட்ட சதமாக சச்சினின் இந்த சாதனை அமைந்திருந்தது

89 ஆவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியுடன் விதர்பா மோதுகிறது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பவுலிங்கை தேர்வு செய்ய முதல் இன்னிங்ஸில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் பவுலராக அறியப்பட்ட ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி 75 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது. விதர்பா அணி தரப்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ்துபே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந்த விதர்பா அணி 45.3 ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்சில் மும்பை அணி 119 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸில் விளையாடிய மும்பை அணி முஷிர் கானின் சதம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் 95 ரன்கள் உதவியுடன் 418 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து விதர்பா அணி வெற்றி பெற 538 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. மும்பை அணியின் 2 ஆவது இன்னிங்சின் போது சிறப்பாக விளையாடிய முஷிர் கான் தனது 19 வயதில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகள் சாதனையை தகர்த்துள்ளார்.

326 பந்துகளை எதிர்கொண்ட அவர் 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முன்னதாக 1994 – 95 சீசனின்போது சச்சின் டெண்டுல்கர் தனது 22 ஆவது வயதில் சதம் அடித்திருந்தார். ரஞ்சி தொடரில் இளம் வயதில் எடுக்கப்பட்ட சதமாக சச்சினின் இந்த சாதனை அமைந்திருந்தது.

இதனை தற்போது 19 வயதில் முஷிர்கான் முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முஷிர்கானின் இந்த சாதனையின்போது சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...