vada pav

இந்திய உணவான வடா பாவிற்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்

5/5 - (3 votes)

இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் நிற்க கூட நேரமின்றி அனைவருமே அவசர கதியில் இயங்கி கொண்டிருப்பதை பார்க்க முடியும். ஒவ்வொருவரும் தங்களது வேலைக்காகவும், தொழிலுக்காகவும் அவசரமாக சென்று கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களால் வீட்டில் அமர்ந்து நிம்மதியாக உணவு அருந்தக் கூட நேரம் இருப்பதில்லை. இதனால் இவர்கள் பெரும்பாலும் சாலையோரத்தில் உள்ள கடைகளில் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்.

மும்பையில் வசிப்பவர்களிடம் அவர்களுக்கு பிடித்தமான காலை உணவு என்ன என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் வடா பாவையே கூறுவார்கள். இதன் நாஊறும் சுவையும், எளிமையான செய்முறையும் பலரின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கிறது. மும்பையில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் யாரோ ஒருவர் வடா பாவ் விற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். மகாராஷ்ட்ராவில் மட்டுமல்லாமல் தற்போது உலகம் முழுவதும் வடா பாவ் பிரபலமாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் வரை பல பிரபலங்கள் வடா பாவ் மீதான தங்கள் அன்பை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்கள். சினிமாவில் நடிக்க முயற்சித்து கொண்டிருந்த காலத்தில் பசியை கட்டுபடுத்த வடா பாவ் சாப்பிட்டு வந்ததாக பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக் கான் ஒருமுறை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இந்திய உணவான வடா பாவிற்கு தற்போது உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அட ஆமாங்க, உலகின் சிறந்த சாண்ட்விச்களின் பட்டியலில் வடா பாவும் இடம் பெற்றுள்ளது நமக்கெல்லாம் பெருமையான விஷயமாகும்.

Taste Atlas என்ற உலகளாவிய பயண வழிகாட்டி சமீபத்தில் உலகின் மிகச்சிறந்த 50 சாண்ட்விச் என்ற பட்டியலை வெளியிட்டது. இதில் நம் இந்தியாவின் வடா பாவ், 4.3 ரேட்டிங் பெற்று 19-வது இடத்தைப் பிடித்துள்ளது. வியட்நாம் சாண்ட்விச் பான் மி மறும் துருக்கியின் டாம்பிக் டோனர் 4.6 ரேட்டிங்குடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. லெபனானின் ஷவர்மா, மோன்ட்ரியலின் ஸ்மோக்ட் மீட், இறால் ரோல்ஸ் போன்ற உணவுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.

வடா பாவை செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படாது. சுவையான உருளைக் கிழங்கை நன்கு மசித்து, அதை கடலை மாவிற்குள் திணித்து எண்ணெயில் பொறிக்க வேண்டும். இதுதான் வடா. மிருதுவான பன் தான் பாவ். இந்த வடாவை பன்னிற்குள் வைத்து சட்னி ஊற்றி தருவார்கள். இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் அதுதான் வடா பாவ். இந்த உணவு முதன் முதலில் அசோக் வைத்யா என்ற தெருக்கடை வியாபாரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் 1960-களில் மும்பை தாதர் ரயில் நிலையத்தின் அருகே கடை நடத்தி வந்துள்ளார். தினமும் பசியால் வாடும் கூலி வேலையாட்களுக்கு ஏதாவது சுவையாக உணவு தயாரித்து கொடுப்போமே என இவர் செய்தது தான் வடா பாவ்.

Related Post