திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒருபகுதியாக ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி பட்டோற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழா கோலாகாலமாக நடைபெற்றது.
நெற்றி பட்டத்தை ஸ்ரீசந்திரசேகர சுவாமிக்கு வழங்கும் வைபவம் பட்டோற்சவ விழா
இவ்விழாவின் ஒருபகுதியாக ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது சார்பாக ஆலயத்தின் தொடர் உற்சவத்தை நடத்திட வேண்டி தனது நெற்றி பட்டத்தை ஸ்ரீசந்திரசேகர சுவாமிக்கு வழங்கும் வைபவம் பட்டோற்சவ விழாவாக நடைபெற்றது. இத்தகைய சிறப்பு விழாவின்படி ஸ்ரீசந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு விஷேச சாயரட்சை பூஜையும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து ஆலயத்தின் 2வது பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்க்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி ஆலய பிரதான பிரகாரத்தையும், ஆழித்தேரோடும் 4 ராஜவீதிகள் வழியாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வரும் 20ம் தேதி வரை 11 நாட்களுக்கு ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி இந்திர விமானம், பூதவாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.