Tamil Nadu Villages Boycott Elections

லோக்சபா தேர்தல் 2024: தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள்

5/5 - (7 votes)

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தலின் முதற்கட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஒரே கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 68,000 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடந்து முடிந்துள்ளது. இதில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளனர். யார் இந்த மக்கள்? அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க காரணம் என்ன

பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர்.

மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர்.

திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர்.

ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை.

பொட்டலூரணி, தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

வேங்கைவயல், புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது.

குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடவரஹல்லி கிராமம், கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த மேடு அக்ரஹாரம் பஞ்சாயத்தில் உள்ள கடவரஹல்லி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் இல்லை என்று பலமுறை கேட்டும் அரசாங்கம் வசதிகளைச் செய்து தரவில்லை என்று கூறி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாததால், அருகில் இருக்கும் நகரத்துக்குச் செல்ல 5கி.மீ. தொலைவு நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லையென்றும், பல முறை அவற்றைச் செய்துதரக் கேட்டும் அரசு செவி சாயிக்காததால் கடவரஹள்ளியில் உள்ள 520 வாக்காளர்களும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதை அறிந்த கலால் டி.எஸ்.பி சிவலிங்கம் மற்றும் காவல் துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் 4 மணி வரை வாக்கு செலுத்த முன்வராத மக்கள், அதற்குப் பின்னர் முன்வந்து தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு வாக்கு செலுத்தியுள்ளனர்.

நடுக்குப்பம், விழுப்புரம்

விழுப்புரம் நடுக்கப்பம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாகப் பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்தது. இதில் அரசு நிர்வாகம் எந்தத் தீர்வையும் எட்ட உதவி செய்யாததால் அந்தப் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்னையில் விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததன் பேரில், மக்கள் அனைவரும் மாலையில் கூட்டமாக வாக்களிக்க வந்துவிட்டனர்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாக்குப் பதிவு முடியும் நேரத்தில் வாக்குச்சாவடியில் குவிந்ததால் தேர்தல் அதிகாரிகள் சிரமப்பட்டு அந்த மக்கள் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளனர்.

கே.கரிசல்குளம், தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

அக்கிராமத்தில் மொத்தம் 1,045 ஓட்டுகள் உள்ள நிலையில், 10 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

அவளூர் , ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி 292இல் 35 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அவளூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

ஆனால் எவ்விதத் தீர்வும் எட்டப்படாததால் அப்பகுதி மக்கள், தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

அங்கு மொத்தமாக 1279 வாக்குகளில் 35 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோத்தக்கல், திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே மோத்தக்கல் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வரும் நிலையில் மாலை 5 மணி வரை 5 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

Related Post