Polling completed Puducherry Tamil Nadu

தமிழ்நாடு புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு 72.09% வாக்குகள் பதிவு

5/5 - (5 votes)

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. பல வாக்குச்சாவடிகளிலும் 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததை பார்க்க முடிந்தது.

காலை 11 மணிக்குப் பிறகு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வரவு சற்று குறைவாகவே இருந்தது. வெயில் குறைந்த மாலை வேளையில் வாக்காளர்கள் வருகை மீண்டும் அதிகரித்தது.

சரியாக மாலை 6 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது. அந்த நேரத்தில், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களோடு வாக்குச்சாவடியில் காத்திருந்த அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் மட்டும் எந்த நேரமானாலும் காத்திருந்து வாக்களிக்க முடியும்.

தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளிலும் சேர்த்து இரவு 7 மணி நிலவரப்படி, 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள், குறைந்த அளவாக மத்திய சென்னை தொகுதியில் 67.37 சதவீதமும் பதிவாகியிருந்தன.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடும் தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் 7487 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

சென்னையைப் பொருத்தவரை, வட சென்னை தொகுதியில் 69.26 சதவீதமும், மத்திய சென்னையில் 67.37 சதவீதமும், தென் சென்னையில் 67.82 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

சென்னையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 3 தொகுதிகளிலுமே கூடுதல் வாக்குகள் பதிவாகியிருந்தன.

Related Post