Agni Natchathiram 2024
Agni Natchathiram 2024

தமிழகத்தில் அதிக வெப்பம் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

5/5 (15votes)

கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தொடங்கவுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களை விட இந்த ஆண்டு வெயில் அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் கொளுத்தி எடுத்து வருகிறது. இதையே தாங்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க போகிறது என்பதை நினைத்தால்தான் மக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.

இந்த கத்தரி வெயில் 29ஆம் தேதி வரை, 26 நாட்களுக்கு இருக்கும். இந்த கத்தரியின் போது வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. அதிலும் கரூரில் அதிகபட்சமாக 112 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இனி இந்த 26 நாட்களும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன தெரியுமா? சூரியனை பூமி சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த வகையில் ஏப்ரல் மாதம் கடைசி அல்லது மே மாதம் தொடக்கத்தில் பூமி, சூரியனுக்கு அருகில் வரும். அப்போது வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கத்தரி வெயிலால் வெப்பம் அதிகம் இருக்கும் நிலையில் உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளால் அக்னி குண்டத்தில் இருப்பது போல் ஒரு ஃபீலிங்கில் மக்கள் தவித்து வருகிறார்கள்.

எனவே மக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வர வேண்டாம் என மருத்துவர்களும் தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் வெயிலில் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

ஊட்டி, கொடைக்கானலில் கூட இந்த ஆண்டு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. நேற்று முன் தினம் வேலூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. அது போல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்றைய தினம் மழை பெய்தது. இது போல் இனி வரும் நாட்களிலும் வருண பகவானின் கடைக் கண் பார்வை தமிழகத்தின் மீது படும் என்றும் கோடை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.