சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு.க ஸ்டாலினோடு கலைஞர் நினைவிடத்தை சுற்றிப்பார்த்தார். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இதனை கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்று கூறலாம்” என்றார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததும் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ரஜினிகாந்த், வைரமுத்து பங்கேற்பு அதன்படி தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடியில் இந்த நினைவிடம் சீரமைக்கப்பட்டது. மேலும் அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை திறந்து வைத்தார். இதேபோல் சீரமைக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடத்தையும் திறந்து வைத்தார்.
கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். குறிப்பாக கி வீரமணி, திருமாவளவன், வைகோ, கோபாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோரும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டனர். நினைவிட திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் ஆளாக நின்று வரவேற்றார்.
ரஜினிகாந்த் பேட்டி கருப்பு நிற சட்டையில் வந்த நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலின் அருகேயே நின்றார். நினைவிடத்தை திறந்து வைத்த பிறகு நினைவிட வளாகத்தை பேட்டரி காரில் சென்று முதல்வர் முக ஸ்டாலின் பார்த்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்தும் பேட்டரி காரில் சென்றார். அப்போது, நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ரஜினிகாந்திற்கு மு.க ஸ்டாலின் விளக்கினார்.
ரஜினிகாந்தும் முதல்வர் ஸ்டாலின் சொல்வதை கவனமாக கேட்டபடி வந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:- மிக மிக அருமையாக இருக்கிறது. அற்புதமாக இருக்கிறது. இதனை கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அருமையாக இருக்கிறது. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
Comments are closed